Home /namakkal /

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி.. மண் பரிசோதனை முகாம்.. - நாமக்கல் மாவட்ட செய்திகள் (மே 19)

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி.. மண் பரிசோதனை முகாம்.. - நாமக்கல் மாவட்ட செய்திகள் (மே 19)

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில்  நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய தொகுப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில்  நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய தொகுப்பாக இங்கே காணலாம்...

    இணையவழித் தேர்வு

    நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகளைப் பற்றிய புரிதல், தகவல்கள், அரசு சார்ந்த நிலங்கள், மக்கள் தொகை, திட்டப் பணிகளை தெரிந்து வைத்துக் கொள்வதற்காக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அவர்கள் சரியான முறையில் தெரிந்து வைத்துள்ளார்களா என்பதை அறிவதற்காக இணையவழியில் 15 ஒன்றியங்களில் தேர்வு நடைபெற்றது. கைப்பேசி வாயிலாக ஊராட்சி செயலாளர்கள் இந்தத் தேர்வை எதிர்கொண்டனர். இதற்கான முடிவுகள் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை..

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து25 காசுகள் அதிரடியாக உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை உயர்வு சந்தித்து 4 ரூபாய் 75 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி..

    நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கேற்ற தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் புறக்கடை மற்றும் தீவிர முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் நுட்பங்கள், நாட்டுக்கோழி இனங்கள், நவீன கோழி வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொரிக்கும் விதம், இன்குபேட்டர்களின் பயன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும், நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், அறிகுறிகள் அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் நாட்டுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    நூல் விலையை கட்டுப்படுத்த கோரி தொடர் வேலை நிறுத்தம்..

    நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் விசைத்தறி தொழில் நூல் விலை உயர்வு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நூல் விலையை குறைக்க வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல்லில் பல்வேறு பகுதிகளில் கன மழை..

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் சாரல் மழை பெய்தது. இதனால் இன்று வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சி சூழல் நிலவியது. மேலும் மாலை நேரத்தில் திடிரென பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேங்காய் ஏலம்..

    பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 11, 165 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூபாய் 26. 50-க்கும், குறைந்தபட்சமாக ரூபாய் 20. 20-க்கும், சராசரியாக ரூபாய் 24. 60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரத்து 230-க்கு ஏலம் நடைபெற்றது.

    மண் பரிசோதனை முகாம்..


    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் முள்ளுக்குறிச்சி, மூலக்குறிச்சி கிராம பஞ்சாயத்து மாரியம்மன் கோவில் திடல் அருகே மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரியைக் கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மண் மாதிரிகளை சுத்தமான துணி பையில், விவசாயின் பெயர், கிராம சர்வே எண், முந்தைய பயிர், அடுத்த சாகுபடி செய்யப்படும் பயிர் ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலவச பட்டா வழங்கிய விஏஒ மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்..

    திருச்செங்கோடு அருகே வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்களுக்கு இலவச பட்டா வழங்கிய வீஏஒ மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு.. 

    வேலூர் வெட்டுக்காட்டு புதூர் அன்பு நகரில் வேலூர் பேரூராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவும், பணிகளை விரைந்து முடித்து தரக்கோரி வெட்டுக்காட்டு புதூர் அருகே வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திடீரென டேங்கர் லாரியை குறுக்கே நிறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 17 பேர் மீது வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி