முகப்பு /நாமக்கல் /

"பெண்களால் முடியாதது ஏதுமில்லை" பஞ்சர் கடை நடத்தும் சிங்கப்பெண் அசத்தல்!

"பெண்களால் முடியாதது ஏதுமில்லை" பஞ்சர் கடை நடத்தும் சிங்கப்பெண் அசத்தல்!

X
லாரி

லாரி டயருக்கு பஞ்சர் ஒட்டும் கண்மணி அக்கா

Namakkal | வாகனங்களுக்கு பஞ்சர்,வெல்டிங், பேருந்து மற்றும் லாரி டயர்களை கழற்றி மாட்டும் வேலைகளை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார் நாமக்கல்லில் பஞ்சர் கடை நடத்தும் கண்மணி.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

உடல் உழைப்பு சார்ந்த தொழிலில் ஆண்கள் மட்டும் தான் ஈடுபட முடியுமா என்ன? பெண்களாலும் அதில் சாதனை படைக்கலாம் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார் கண்மணி அக்கா. இருசக்கர வாகனம் முதல் பேருந்து, லாரி வரையிலான கனரக வாகனங்களுக்கு பஞ்சர்,வெல்டிங், பேருந்து மற்றும் லாரி டயர்களை கழற்றி மாட்டும் வேலைகளை சர்வசாதாரணமாக செய்து வருகிறார். அதை காண நமக்கு பிரம்மிப்பாக உள்ளது.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண் சாதனையாளர்களை கௌரவப்படுத்தி பெருமை கொள்கிறது நியூஸ் 18 ஊள்ளூர் செய்தித்தளம். அந்த வகையில் நாமக்கல் புதன்சந்தை பகுதியை சேர்ந்த பஞ்சர் கடை நடத்திவரும் கண்மணி அக்கா குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

நாமக்கல் - சேலம் சாலையில் புதன்சந்தை என்னுமிடத்தில் பஞ்சர் கடையை நடத்தி வந்தவர் வெங்கடாசலம். இவருக்கு கண்மணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெங்கடாசலத்திற்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் பஞ்சர் ஒட்ட முடியவில்லை. இதன்காரணமாக வெங்கடாசலம் மற்றும் கண்மணி தம்பதியர் குடும்பம் வறுமைக்குள்ளானது. அதன்பின் கண்மணி தனது கணவர் செய்து வந்த தொழிலான பஞ்சர் பார்க்கும் தொழிலை மேற்கொள்ள தொடங்கினார். தனது கணவரின் ஆலோசனையுடன் பஞ்சர் கடையை வெற்றிகரமாக நடத்திவருகிறார். பேருந்து, லாரி, ஆட்டோ, ஜேசிபி, கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களுக்கு அசால்ட்டாக கண்மணி டயரை கழற்றி மாற்றி பஞ்சர் பார்த்து வருகிறார். இவர் பஞ்சர் பார்ப்பதுமட்டுமின்றி வெல்டிங் வேலையிலும் கைத்தேர்ந்தவர் என்கின்றனர் அக்கப்பக்கத்தினர்.

"தங்களது வாகனம் திடீரென பஞ்சர் ஆனால் அதுவும் நள்ளிரவு இருந்தாலும் சரி கண்மணி அக்கா முகம்சுழிக்காமல் பஞ்சரை சரிசெய்து தருவார்கள்" எனக்கூறிகின்றனர் லாரி ஓட்டுநர்கள்.

இதுகுறித்து கண்மணியுடன் பேசுகையில் தனக்கு 46 வயதாகிறது. தான் இந்த தொழிலை கடந்த 25 வருடங்களாக மேற்கொண்டு வருவதாகவும் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் இந்த தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 24 மணி நேரத்தில் எப்போதும் பஞ்சர் என வந்தாலும் பஞ்சர் ஒட்டி தருவேன்.தினந்தோறும் பஞ்சர் பார்த்து கிடைக்கும் வருவாயை வைத்து தனது இரண்டு மகள்களையும் எம்.இ. மற்றும் எம்.ஏ வரையிலும் மகனை டிப்ளோமா படிக்கவைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இதுவரை யாரிடமும் கடன்பெற்றதே இல்லை தன்னுடைய சொந்த உழைப்பில் மட்டும் ஈட்டிய வருவாயை கொண்டுதான் படிக்க வைத்ததாகவும் கர்வமுடன் கூறுகிறார் கண்மணி. தனது உறவினர்கள் ஆரம்பகாலத்தில் தன்னிடம் எந்த பெண்ணாவது ஆண்கள் செய்யும் வேலையை பார்ப்பார்களா என ஏளனமாக பேசினார்கள். வேலையில் ஆண் வேலை பெண்வேலை என தனியாக எதுவும் கிடையாது. பிடித்ததை செய்தேன். ஆனால் தற்போது எங்களுடைய வளர்ச்சிக்கண்டு பெருமைப்படுகின்றனர் என புன்முறுவலுடன் தெரிவித்தார் கண்மணி.

பொதுவாக பஸ்,லாரி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணியை ஆண்கள் மட்டும் ஈடுபடுவார்கள். ஏனென்றால் சக்கரத்தின் எடை அதிகமாக இருக்கும். அதனை தூக்குவதற்கு நல்ல உடல் வலு வேண்டும். ஆனால் கண்மணி "அதுலாம் ஒன்னும் வேண்டா பா ! மன தைரியம் இருந்த போதும் எதையும் சாதிச்சிடலாம்" என ஆணவத்துடன் தெரிவித்துக்கொண்டு லாரி ஒன்றில் ஏற்பட்ட பஞ்சரை சரிசெய்ய கிளம்பிவிட்டார்." வேலைல என்ன ஆம்பிளை வேலை பொம்பள வேலை" என கண்மணி அக்கா கூறியது எத்தனை நிஜம்.

First published:

Tags: Local News, Namakkal