நாமக்கல் அருகே நூறு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாத விநோத கிராமம் ஒன்று உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாநிலம் முழுதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை களைகட்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுதும் பரவலாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் எதுவுமின்றி களையிழந்துள்ளது.
இந்த ஆண்டு நிலைமாறி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால், நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட போது மட்டுமல்ல, கடந்த நூறு ஆண்டுகளாகவேபொங்கல் பண்டிகையை கொண்டாடுவதைத் தவிர்க்கும் விநோதப் பழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றனர்.
நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கிலிபட்டி என்னும் அழகிய கிராமம். பொங்கல் பண்டிகை என்பதால் தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இந்த கிராமம் மட்டும் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கேட்டபோது, “கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது சாமிக்கு படையல் வைத்திருந்த பொங்கலை நாய் ஒன்று சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதிய கிராம மக்கள், அந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்துள்ளனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக இறைவனுக்கு வழிபாடு நடத்தப்பட்டபோது, கிராமத்தில் உள்ள கால்நடைகள் இறந்தன. தொடர்ந்து நடந்த இதுபோன்ற அசம்பாவிதங்களால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கத் தொடங்கினர். இச்சூழலில் கடந்த நான்கு வருடங்களாக, இந்த மூடநம்பிக்கையை தகர்த்தெறிய சிங்கிலிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ மட்டும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வந்தார். ஆனால் அவருடன் எந்த கிராம மக்களும் பொங்கல் வைக்க முன்வராமல் இருந்துள்ளனர். இதனால் தற்போது அவரும் பொங்கல் வைப்பதில்லை.
பொங்கல் பண்டிகை தொடர்பான எந்த விழாவும் கிராமத்தில் நடத்துவதில்லை. கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை. பொங்கல் வைத்தால் தங்களது வீட்டில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளதாகதெரிவித்தார்”
கொண்டாட்டங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துஇருக்க முடியாது. எனினும்நூறு ஆண்டுகளாக, அதாவது நான்கு தலைமுறைகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாத கிராமம் நம்மை சற்றே வியப்பில் ஆழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Pongal festival, Village