ஹோம் /மயிலாடுதுறை /

மயிலாடுதுறையில் சிறப்பாக நடைபெற்ற காவிரி துலாக்கட்டத்தின் கடைமுக தீர்த்தவாரி நிகழ்வு

மயிலாடுதுறையில் சிறப்பாக நடைபெற்ற காவிரி துலாக்கட்டத்தின் கடைமுக தீர்த்தவாரி நிகழ்வு

கடைமுக தீர்த்தவாரி

கடைமுக தீர்த்தவாரி

Mayiladudurai District News : பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கினர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்ற பெருமைகளை கொண்ட மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கும்.

  கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடிப் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக மக்கள் நம்புகின்றனர்.

  இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதாரண்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

  மேலும், 10 நாள் உற்சவமாக மயிலாடுதுறையிலுள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள 10 நாள் உற்சவத்தில், 13-ம் தேதி திருக்கல்யாணமும், 15-ம் தேதி திருத்தேர் வீதியுலாவும் நடைபெற்று 16-ம் தேதி மயிலாடுதுறை நகருக்குப் பெருமை சேர்க்கும் கடைமுக தீர்த்தவாரியும் நடந்தது.

  இதையும் படிங்க : மயிலாடுதுறையில் பல இடங்களில் வழிந்தோடும் சாக்கடை நீர் - பொதுமக்கள் கடும் அவதி

  இந்த ஆண்டு மயூரநாதர் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு வருவதால் மயூரநாதர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெறவில்லை. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோயில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர்.

  பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக காவிரி நதியில் குதித்து விளையாடினர்.

  இதையும் படிங்க : மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம் - மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு!

  கார்த்திகை மாதத்தில் முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்குத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி பஞ்சமூர்த்திகளை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

  துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை சூப்பிரண்டு நிஷா தலைமையில் 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் செய்துள்ளது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை

  Published by:Karthi K
  First published: