அமைச்சர் பி.டி.ஆரின் உரை குறித்தும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் இன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
வழக்கமாக இது போன்ற சமகால அரசியல் சார்ந்து கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கும் ஜெயமோகன், தற்போது இப்படி ஒரு கட்டுரை வெளியிட்டிருப்பது வாசகர்கள் மற்றும் அரசியலர்கள் மத்தியில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய 'அறம்' நூல் பி.டி.ஆருக்கு கொடுக்கப்பட்டது குறித்து பேசுவதாய் துவங்கும் அந்தக்கட்டுரை பின், பி.டி.ஆரின் உரையாற்றும் இயல்பு குறித்தும், மத்திய அரசின் அதிகார குவிப்பு தொடர்பாக அவர் பேசியதாக சில பார்வைகளையும் முன்வைத்துள்ளது. பி.டி.ஆரை முன்வைத்து தமிழக அரசியலில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள தற்கால சூழலில் ஜெயமோகன் இந்தக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையில், "அண்மையில் இரு இலக்கியவிழாக்களில் பி.டி.ஆரின் பேச்சை அரங்கில் அமர்ந்து கேட்டேன். ஒன்று, பெங்களூர் இலக்கியவிழா. இன்னொன்று திருவனந்தபுரம் மாத்ருபூமி இலக்கிய விழா. இரண்டுமே அரசியல் விழாக்கள் அல்ல. அறிவுசார்ந்த விழாக்கள். இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள் வந்தமர்ந்த அவைகள். இரண்டிலும் அவர் உரை ஓர் அறிவார்ந்த அவைக்கு உகந்ததாக, அங்கே கூடியிருந்த பலதரப்பட்டவர்களை நிறைவுறச் செய்வதாக இருந்தது.
தமிழகத்தில் இருந்து ஓர் அரசியல்வாதி இந்திய அளவிலான ஓர் அறிஞரவையில் மிகையில்லாமல், பாவனைகள் இல்லாமல், மிதமான அறிவார்ந்த மொழியில் உரையாடுவதை பி.டி.ஆர் பேசும்போது கண்டேன். தமிழில் அவருக்கு அந்த அறிவார்ந்த மொழி கைகூடுவதில்லை என்பதையும் பின்னர் கவனித்தேன். அந்த அவை யோசிக்கத்தக்க புதிய சில கோணங்களையும் முன்வைத்தார்.
தேய்வழக்குகளும், பழகிய கருத்துக்களும் இல்லை. இரு உரைகளிலும் அவர் தன் மையக்கருத்தை ஒட்டிய விரிவாக்கத்தில் எதையும் திரும்பச் சொல்லவுமில்லை. புதிய தரவுகளும் புதிய சொற்றொடர்களுமே இருந்தன. அவருடைய அரசியல் தரப்பை கடந்து நான் அவற்றின் தத்துவமையமாக எடுத்துக்கொண்டது இது:
மையத்தை வலுப்படுத்துவதன் வழியாக ஓர் அமைப்பை உறுதியாக நிலைநாட்டமுடியும் என்று நம்பிய பத்தொன்பது– இருபதாம் நூற்றாண்டுகள் இன்றில்லை. மையம் வலுவாக இருக்கவேண்டும் என்றால் உறுப்புகள், விளிம்புகள் முடிந்தவரை சுதந்திரமாக இருக்கவேண்டும். அவற்றின் சுதந்திர இயக்கத்தின் இயல்பான சந்திப்புப் புள்ளியாக மையம் இருக்கவேண்டும். குறைவான பொறுப்பு கொண்ட மையமே வலுவான நிர்வாகம் கொண்டது. அதுவே புதிய நிர்வாக இயல்.
இதையும் படிங்க; காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகுகிறேனா.? - டி.கே.சிவக்குமார் விளக்கம்
இந்த 21 ஆம் நூற்றாண்டு அடிப்படைப்புரிதல் இன்றைய மைய அரசுக்கு இல்லை. அவர்கள் தேங்கிப்போன பழைய மனநிலை கொண்டவர்கள். ஆகவே எல்லா அதிகாரங்களையும் தங்களிடம் குவிக்க முயல்கிறார்கள். அதன் வழியாக அவர்கள் தங்களை பலவீனமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பலவீனமான உறுப்புகள் மற்றும் விளிம்புகளின் மையமும் பலவீனமாகவே இருக்க முடியும். அந்த துணைப்பகுதிகள் ஒன்றோடொன்று மோதும் என்றால் மையம் மேலும் பலவீனமாக ஆகும்.
பொருளியல் ரீதியாக தன் உறுப்புகளை தனியாகச் செயல்பட விடாத மைய அரசு பொருளியல் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக உள்ளது. இன்றைய அரசின் மையத்திட்டமிடல் அதன் உறுப்புகளின் தேவைக்கு உகந்ததாகவோ, யதார்த்தத்தை புரிந்துகொண்டதாகவோ இல்லை. இந்தியா சென்ற ஐம்பதாண்டுகளில் மேலும் மேலும் அதிகாரக்குவிப்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. விளைவாக , எந்த முடிவையும் எடுக்கமுடியாதபடி இந்திய நிர்வாகமே தேங்கியிருக்கிறது. என்ன தேவையோ அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை, எவருக்கு மையத்தில் செல்வாக்குள்ளதோ அதனடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஆகவே இந்தியப்பொருளியல் நெருக்கடியில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Minister Palanivel Thiagarajan, Writer Jayamohan