"பாண்டிச்சேரி மில்லி என்ற பெயரில் கள்ளச்சாராயத்தை மரக்காணம் மக்கள் பல ஆண்டுகளாக அருந்தி வந்துள்ளதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் களையெடுக்கப்பட வேண்டும்" எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மக்கள் அதிகார அமைப்பு சார்பில் நடைபெற்று மாநாட்டில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"கள்ளச்சாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இழப்பீடு அளித்தாலும், கள்ள சாராயத்தை விற்பனை செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அரசு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.
மது விலக்கை நடைமுறைப்படுத்த தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது. மது விற்பனையை அனுமதித்தும்கூட கள்ள சாராயம் புழங்குகிறது. கள்ள சாராயத்தை ஒழிப்பதும், மது விலக்கை அமல்படுத்துவதும் சம காலத்தில் நிகழ வேண்டும். இது குறித்து முதல்வர் ஆராய வேண்டும். அதிகாரிகள் தான் அரசை இயக்குகிறார்கள் என்பது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதிகாரிகள் தான் அரசை வழி நடத்துகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அது பிரதமருக்கும் பொருந்தும்.
கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியை விசிக ஆதரிக்கிறது. அதற்காக, ஒரு சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை முன்வைத்து அரசின் செயல்பாடுகளை மொத்தமாக புறக்கணிக்க முடியாது.
பாண்டிச்சேரி மில்லி என்ற பெயரில் மரக்காணம் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் இந்த கள்ளச்சாராயத்தை அருந்தி வந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் தண்டித்து களையெடுக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது அந்த செயலை ஊக்குவிக்கும் என்ற கருத்தை மறுக்க முடியாது. ஆனால், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு இந்த இழப்பீட்டை ஏற்க வேண்டியுள்ளது." . என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மாநில கல்வி கொள்கை குழுவில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன் பதவி விலகிய பின்னர், அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அரசு ஆராய வேண்டும். மாநில கல்வி கொள்கை வரையறுக்கும் குழுவில் பாஜக ஆதிக்கம் இருக்கிறது என்பதை கடந்து செல்ல முடியாது. முதல்வர் இதை கவனிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்... வானதி சீனிவாசன் அழைப்பு
பாஜக கூட்டணியில் சேர பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விசிகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், “பாஜக கூட்டணிக்கு விசிகவை அழைத்து நகைச்சுவை செய்கிறார் வானதி ஶ்ரீனிவாசன்" என திருமாவளவன் தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thirumavalavan, Vanathi srinivasan