முகப்பு /செய்தி /மதுரை / கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மணக்கோலத்தில் காட்சியளித்த அம்மனையும், சுவாமியையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Madurai, India

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையின் பட்டத்து அரசியாக முடி சூடிய மீனாட்சி, நேற்று திக் விஜயம் செய்தார். அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை தொடங்கியது.

மதுரை மல்லிகை, கனகாம்பரம், தாய்லாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்க்கிட் உள்ளிட்ட 10 டன் மலர்களைக் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் காலை 6 மணியளவில் மணமேடைக்கு எழுந்தருளினர்.

அதன்பின்னர் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனி வாகனத்திலும் நான்கு சித்திரை வீதிகளை சுற்றி வந்தனர். வைரத்தாலி, மரகத பதக்கம் தங்கப்பூணூலும் காசுமாலையும் அணிந்து தங்கக்கவசத்துடன் நித்திய சுமங்கலியாக மீனாட்சி அம்மனும், கல்யாணக் கிரீடம், சித்தர் பதக்கம், நீலநாயகப்பதக்கம் அணிந்து அருகில் அமர்ந்திருக்கும் பிரியாவிடையுடன் சொக்க வைக்கும் அழகுடன் சோமசுந்தரப்பெருமானும் திருவீதி உலா வந்தனர். அப்போது, திரளான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க : மணக்கோலத்தில் ஜொலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்.. மகிழ்ச்சியில் மதுரை மக்கள்!

திருவீதி உலாவிற்கு பிறகு சுந்தரேசுவரரும், மீனாட்சியம்மன் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து காலை 8:35 மணிக்கு மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து பட்டர்கள் மாலை மாற்றும் வைபவம் அரங்கேறியது. இதனையடுத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் வேத, மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க மிதுன லக்கனத்தில் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் தங்களது மங்கள நானை மாற்றிக் கொண்டனர். இந்த திருக்கல்யாணத்தை கோயிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும், கோயிலுக்கு வெளியே எல்.இ.டி திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டு களித்தனர்.

திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்தினர். மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி, சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு தடபுடலாக விருந்து நடைபெற்றது. திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து இரவு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், யானை பல்லக்கில் சுவாமியும் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது.

செய்தியாளர் : சிவக்குமார் (திருமங்கலம்)

First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival