ஹோம் /மதுரை /

மதுரையில் ஆதரவற்றோரின் பசியாற்றும் சமூக சேவகர் நெல்லை பாலு...

மதுரையில் ஆதரவற்றோரின் பசியாற்றும் சமூக சேவகர் நெல்லை பாலு...

சமூக

சமூக சேவகர் நெல்லை பாலு

Madurai | மதுரையில் பிளாட்பாரங்களில் வாழும் ஆதரவற்றோர் உள்ளிட்ட பலரின் பசியை போக்க இலவசமாக உணவு வழங்கி வருகிறார் நெல்லை பாலு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

தானங்களில் எல்லாம் உயர்ந்தது அன்னதானம். 'அன்னம் பரப்பிரம்மம்' என்று அதனால்தான் சொல்லி வைத்தனர் நம் முன்னோர். அதாவது உணவே முதல் கடவுள். இந்த உலகில் பிறந்த புல், பூண்டு முதலிய எந்த உயிருக்கும் முதல் ஆதாரம் உணவு மட்டுமே. அந்த உணவுக்காகத் தான் இத்தனை பாடும்.

உணவுக்காக பஞ்சம் ஏற்பட்டபோது பல போர்களைக் கண்ட வரலாறும் நமக்கு உண்டு. மதுரையில் பெரும் பஞ்சம் தலைவிரித்து ஆடியதன் விளைவுதான், முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு ஆதாரமாக அமைந்தது.

மனித மனம், 'போதும்' என்று சொல்லும் ஒரே விஷயம் 'அன்னம்' மட்டுமே. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். "வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்றார் மகாகவி பாரதியார்.

பிறருக்கு தானம் செய்வது நமக்கு பெரும் புண்ணியத்தை தேடித்தரும். அதிலும் அன்னம் இடுவது மற்ற தானத்தை விடவும் உயர்ந்தது. நம் வீடுகளில் விசேஷ வைபவங்களின் போது உணவு கொடுத்து உபசரிப்பது கூட ஒரு வகை தானம்தான். ஆக, உணவே பிரதானம்.

இதையும் படிங்க : மதுரை மாநகரில் இத்தனை ஹிட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா...!

எல்லோருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனாலும், அதற்கான சூழல்தான் வாய்ப்பது இல்லை. கொடுக்க மனம் இருந்தாலும், உதவ நேரமில்லை என்பதுதான் உண்மை.

மதுரையில் ஆதரவற்றோருக்கும், வறியோருக்கும் ரோட்டில் ஆங்காங்கே அமர்ந்து இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வயிற்றுப் பசியைப் போக்கும் அரும் பணியினை செய்து வருகிறது, "மதுரையின் அட்சய பாத்திரம்". நெல்லை பாலு தொடங்கிய இந்த இயக்கம், கடந்த 500 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மதிய உணவு வழங்கி வருகிறது.

சமூக சேவகரான நெல்லை பாலு  தொடங்கிய இந்த இயக்கம், முதலில் அவரது சொந்த பணம் போட்டு பிறருக்கு பசியை போக்கும் பணிகளை செய்தது. ஒரு கட்டத்தில் தேவை அதிகமாக இருக்கவே, அவரால் செய்ய இயலாது எனும் நிலையில் பிற நல்ல உள்ளங்களின் உதவியோடு இந்த திட்டம் நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 300 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றால் கட்டப்பட்டது...! பிரம்மிப்பூட்டும் மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் சிறப்புகள்..!

அன்னதானம் செய்வதன் மூலம் நமது பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கும், நமது சந்ததிக்கும் கிடைக்கும். அவர்களின் ஆசியால் நமது தலைமுறை, குடும்பம் செழிக்கும். அன்னதானம் செய்ய, மலையை அசைத்து பார்க்க வேண்டிய தேவை எல்லாம் இல்லை. சிறிதளவு பொருளுதவி செய்தாலே போதும். இதனை, நம்மால் செய்ய இயலாத பட்சத்தில் அதனை செய்யும் மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பிற்கு உதவலாம்.

மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பின் உணவு கொடுக்கும் சேவையை பாராட்டி மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கடந்த குடியரசு தினத்தன்று நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

இதில் பங்கேற்க விரும்பும் நல்ல உள்ளங்கள் 94426 30815 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாம் செய்யும் மிக சிறிய உதவி கூட மற்றவருக்கு மிகப்பெரிய பேருதவியாக அமையும். எனவே, காலம் தாழ்த்த வேண்டாம். பிறரின் பசியை போக்கும் நெல்லை பாலு போன்ற நல்ல உள்ளங்களோடு கை கோர்ப்போம்.!

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai