மதுரை நெல்லையப்பபுரம் லிங்கப்பன் மகன் அகிலேஸ்வரன் என்கின்ற அகிலேஷ் (10 வயது) தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் அகிலேஷ் உள்ளிட்ட பள்ளி நண்பர்கள் நான்கு பேரும் மதுரை கூத்தியார்குண்டு கண்மாயில் மே 12 காலை குளிக்கச் சென்றனர்.
மகிழ்ச்சியோடு குளித்துக் கொண்டிருந்த போது அகிலேஷ் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்று நீருக்குள் மூழ்கி உள்ளான். இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர். அகிலேஷ் உறவினர்கள் இரவு வரை தேடியும் அகிலேஷ் கிடைக்கவில்லை. பின்னர், இவர்களுடன் சென்ற சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, நாங்கள் கூத்தியார்குண்டு கண்மாயில் குளிக்கச் சென்றோம் அப்போது அகிலேஷ் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அவன் நீரில் மூழ்கியதைப் பார்த்து பயந்து நாங்கள் ஓடிவந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து அகிலேஷின் பெற்றோர் ஆஸ்டின்பட்டி காவல்துறையில் புகார் செய்தனர்.
ஆஸ்டின்பட்டி போலீசார் நேற்று மே 13 காலை மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சுமார் ஒருமணிநேரம் தேடுதலுக்கு பின் சிறுவனின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடைவிடுமுறை காலம் என்பதால் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலை பகுதியில் குழந்தைகள் செல்லாத வண்ணம் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடம் இதுகுறித்து உரிய அறிவுரை கூற வேண்டும் என காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் வேண்டுகோள்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.