மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு மூளைத் தண்டுவடப் பகுதியில் இருந்த கட்டியை அகற்றி அரிதான அறுவைச் சிகிச்சை செய்து அங்குள்ள மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து ஹானா ஜோசப் மருத்துவமனை மேலாண்மை இயக்குநரும், நரம்பியல் துறை தலைமை இயக்குநருமான மருத்துவர் எம்.ஜே. அருண்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கழுத்துப் பகுதியில் அதிக வலியுடன் அவதிப்பட்டு வந்த 11 வயது சிறுமி எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாா்.
வலது கையால் எழுதும்போது, எழுந்து நடக்கும்போது, பிற வேலைகளைச் செய்யும்போது அடிக்கடி கீழே விழுவது போன்ற பிரச்னை இருந்துள்ளது. எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தண்டு வடத்தின் முன்பகுதியில் பெரிய கட்டி இருப்பதும், அது மூளைத்தண்டு மற்றும் கழுத்து தண்டு வடத்தை அழுத்திக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக ஹானா ஜோசப் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஹானா ஜோசப் மருத்துவமனை
முதல் நாளில் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் மைக்ரோ சா்ஜரி எனப்படும் நுண்அறுவைச் சிகிச்சை 9 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டு 70 சதவீத கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையில் 500 மில்லி வரை ரத்த இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரத்த அழுத்தம் உள்ளிட்ட சில காரணிகளைக் கருத்தில் கொண்டு, அறுவைச் சிகிச்சையைத் தொடர இயலவில்லை.
அதன் பின்னா், நான்காவது நாள் 6 மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முழுமையாக கட்டி அகற்றப்பட்டது. சில மணி நேரங்களில் நினைவு திரும்பியதும், தீவிர கண்காணிப்புப் பிரிவில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த 14 ஆவது நாளில், ஸ்கேன் பரிசோதனையில் கட்டி முழுமையாக அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிறுமியின் மூளைத் தண்டு மற்றும் கழுத்து தண்டுவடப் பகுதியின் இரு பக்கங்களிலும் கட்டி வளா்ந்திருந்ததால், இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. சிறுமியின் வயது, எடை போன்றவையும் சவாலாக இருந்தன.
பொதுவாக இத்தகைய கட்டி நடுத்தர வயதினருக்கும், வயதானவா்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. குழந்தைப் பருவத்தில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த கட்டி அரிதான சிகிச்சையின் மூலமாக அகற்றப்பட்டுள்ளது. எனது தலைமையில், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் ஆா்.வீரபாண்டியன், கே.செந்தில்குமாா், அ.கணேஷ் மற்றும் மயக்கவியல் நிபுணா்கள் ஆகியோா் கொண்ட குழுவினரால் இச் சிகிச்சையை செய்து முடிக்கப்பட்டது என்றாா்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.