மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கீழமாசி வீதி தேர்முட்டியில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் சொக்கநாதர் பிரியாவிடை பெரிய தேரும் மீனாட்சி சிறிய தேரும் கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டன.
மூன்றாண்டுகள் சேர்ந்திருந்த தூசுகள் மொத்தமும் ஏர் ஸ்பிரே மூலம் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தற்போது வார்னிஷ் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்களை சுத்தப்படுத்தி வண்ணம் தீட்டும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 12 ஆண்டுகளாக இறைத் தொண்டாக செய்து வருகிறது.
வேலை நாளன்று பகலில் தூசுகளை அகற்றியதில் கிளம்பிய தூசு புகையை குறித்து அங்குள்ள வியாபாரிகள் முகம் சுளிக்கவே இல்லை. அன்போடு தங்களிடம் பழகி உபசரிப்பதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு தேர்களின் அடிப்பாகமான மரச் சிற்ப பகுதிகளை தயார் செய்ய அதிகபட்சம் ஒருவாரம் ஆகும் என்கிறார்கள் ஊழியர்கள். மரச் சிற்பங்களை வலம் வந்து பார்த்தபோது ஆங்காங்கே சிற்ப பகுதிகளில் விரிசல் விட்டிருப்பது தெரிய வந்தது. பணியாளர்களிடம் விபரம் கேட்டோம்.
இருபது ஆண்டுகளுக்கு முந்தைய அரசாங்க கல்வெட்டின்படி இரண்டு தேர்களும் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்த சிற்ப அமைப்பு முறை எல்லாமே அந்தகால வகையைச் சார்ந்தது. செருகுதல் அமைப்பில் உருவாக்கம் செய்யப்பட்டது. தேர்களின் விரிசல் உள்ளிட்டவற்றை முறையாக மராமத்து செய்யும் ஆள்கள் இப்போது எங்கும் கிடைப்பதில்லை என்றனர்.
பருவமாற்றம் காரணமாக இந்த மரத் தேர்களில் ஏற்பட்டுள்ள விரிசல் உள்ளிட்டவற்றை கோயில் நிர்வாகம் கவனித்து அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய குறைபாடுகூட தேர்களில் இல்லாத வண்ணம் சரிசெய்ய வேண்டும் என அங்குள்ள வியாபாரிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும், சாலை தூசுகளை அகற்றும் பிரஷ்களை கொண்ட மிஷின் வாகனங்கள் மாநகராட்சி கைவசம் உள்ளன. தினமும் காலை மாலை அந்த வாகனங்களை கொண்டு இந்த தேர் பகுதி முழுக்க சுத்தம் செய்து விட்டால் மேலும் மேலும் தேரில் தூசு படியாமல் இருக்கும் என்பது பணியாளர் கோரிக்கை.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai