மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் மதுரை -
தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை,
புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும், சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
சமணர் மலை என்றால், பெரும்பாலும் பலருக்கும் தெரிந்திருக்காது. மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் இருக்கும் ஒரு மலை, வரலாற்றின் மிக முக்கிய அடையாளமாக விளங்கி நிற்கிறது என்றால் மிகை ஆகாது. அதுதான் தமிழின் முதல் எழுத்துக்கள் உருவானதற்கு சான்றாக விளங்கும் இடம் என்பது பலரின் நம்பிக்கை. இப்போது நாம் பேசும், எழுதும், படிக்கும் தமிழ் எழுத்துகளின் ஆதி வடிவம் இங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

சமணர் மலையிலுள்ள சிற்ப்பங்கள்
இந்த மலையில் பல வரலாறுகளை சொல்லும் கல்வெட்டுகளும் துறவியரின் சிற்பமும் பெரியளவில் காணப்படும். இங்கு இயற்கையாகவே அமைந்த சுனை ஒன்று பேச்சிப் பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. பேச்சிப் பள்ளம் பகுதியில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர்கள் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.

சமணர் மலை அறிவிப்பு பலகை
இந்த பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு கோமதேஸ்வரர், பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.

மதுரை சமணர் மலை
அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காது நீண்ட உருவம் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது. இச்சிற்பத்தில் மகாவீரர், இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின் கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. வடமாநிலங்களில்கூட இப்படி முழுமையான மகாவீரர் சிற்பம் படைக்கப்பட்டது கிடையாது. இங்கு காணப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த மலை மற்றும் அங்குள்ள சிற்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பொலிவிழந்து அழியும் தருவாயில் உள்ளது, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. எனவே தமிழக சுற்றுலா துறை இதனை கருத்தில் கொண்டு இதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் உள்ளூர் வாசிகளும் சமணர் மலையின் பெருமைகளை அறிந்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.