Home /madurai /

மதுரையில் வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க முகாம்கள்: 24 மணி நேர சேவை எண்கள் அறிவிப்பு

மதுரையில் வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க முகாம்கள்: 24 மணி நேர சேவை எண்கள் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டத்தில் அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாவட்டத்தில் பொது மக்களை பாதிப்பில் இருந்து காக்கவும் 24 நேரத்தில் பொது மக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு பாதிப்புகள் குறித்து தெரிவிக்கவும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 190 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மதுரை ஆட்சியர் அனிஷ்கேசர் தெரிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளப்பெருக்கு தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்டது.

    வாடிப்பட்டி தாலுகாவில் மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதி, மேற்கு தாலுகாவில் துவரிமான் வைகை ஆற்றுப்பகுதி, வடக்கு தாலுகாவில் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதி, தெற்கு தாலுகாவில் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் தாலுகாவில் தென்கால் கண்மாய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.

    இந்த பணியில் 5 துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒவ்வொரு இடத்திலும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

    190 நிவாரண முகாம்கள் மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை தங்க வைக்க ஏதுவாக 190 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் முதல் அணைகள் வரை முழுகொள்ளவை எட்டியுள்ளன. மேலும் எந்நேரத்திலும் அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்படலாம்.

    வைகை கரையோரங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. வைகை கரையோரம் எளிதில் நீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டு சூழலுக்கேற்ப பொதுமக்களை மீட்டு அருகே உள்ள நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்கு அலுவலர் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.

    வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ஆற்றில் இறங்குவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். அதனை கண்காணித்திட அலுவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் நோய் பரவலை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் சிரமமின்றி தெரிந்துகொள்வதற்கும், புகார்கள் தெரிவிப்பதற்கும் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மதுரை ஆட்சியர் அனிஷ்கேசர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி