மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதற்காக கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மே 3-ந்தேதி புறப்பாடாகிறார். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் இந்த திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்தினம் இரவு தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்கு எழுந்தருள்வது வழக்கம்.
இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் ஆயிரம் பொன் சப்பரம் செய்யப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பு எதுவும் செய்யப்படாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அழகர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் பணியை சம்பிரதாயமாக அழகர் கோவில் நிர்வாகம் ஆண்டுதோறும் செய்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சப்பரம் முகூர்த்தமாக பணி தொடங்கியது. இந்த ஆண்டு சம்பிரதாயமாக அந்த சப்பரத்தை சிறிதாக செய்யாமல், பழங்கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பிரமாண்டமாக செய்யும் நோக்கத்தோடு, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ALSO READ | மதுரை சித்திரை திருவிழா 2023| கீழமாசி வீதியில் நடப்பட்டது முகூர்த்தக்கால்!
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சக்கரங்களையும் அதன் கட்டைகளையும் புதுப்பித்து நேற்று அந்த சக்கரத்தை தல்லாகுளம் சப்பரத்தடி கருப்பசாமி கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கோவில் துணை ஆணையர் ராமசாமி நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.