மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறை தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரயில் மூலம் அனுப்பி வைத்து, அங்கிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு கொண்டு சேர்ப்பர். இதற்காக கையாளும் கட்டணம் மற்றும் பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில்வேயில் முதல் முறையாக ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி, மதுரை - சென்னை தேஜஸ் ரயிலில் தபால்துறை மூலம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ரயில்வேயில் 15 பகுதிகளில் இருந்து தபால்துறையுடன் இணைந்து இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் முற்றிலும் பார்சல் பெட்டிகளை கொண்ட கதிசக்தி பார்சல் ரயில் மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா வழியாக கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையம் வரை செல்கிறது.
மேலும், மற்ற சரக்கு ரயில்களை போல இல்லாமல், கதிசக்தி ரயில் விரைவில் பார்சல்களை டெலிவரி செய்யும் வகையில் தடையற்ற ரயில் போக்குவரத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் வாரந்தோறும் இயக்கப்பட உள்ளது. இதில், 35 கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களை தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம். ரயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. மதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறு, குறுந்தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்களுக்கு இந்த ரயில் வசதியாக இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை தென்மண்டல தபால்துறை தலைவர் ஜெய்சங்கர் தலைமையில், ரயில்வே தபால்சேவை கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட தபால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Southern railway