மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார்.
தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய அவர், "திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அரசாணை அதிமுக ஆட்சி காலத்திலேயே வெளியிடப்பட்டது. ஆனால் அண்மையில் திருமங்கலத்தில் திமுக 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ வ வேலு திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைவதற்கு முயற்சி எடுத்தவர் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் திமுக மாவட்ட செயலாளர் ரயில்வே மேம்பாலத்திற்கு எங்கேயாவது கோரிக்கை மனு அளித்து இருந்தால் அதை நிரூபியுங்கள். நான் அரசியல் வாழ்க்கையை விட்டு ஒதுங்கி விடுகிறேன்.
ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைக்காதீர்கள். மக்கள் அதை நம்ப தயாராக இல்லை. இப்படித்தான் ஒரு அமைச்சர் பேசினார். அவரை தற்போது ஒரு மூலையில் அமர வைத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து அதை எங்கே வைப்பது என தெரியாமல் தவிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி ஆடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க முடியுமா? முடிந்தால் தூக்கிப் பாருங்கள்.
முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினால் திமுக அரசு அன்றே வீட்டுக்குப் போய்விடும். அந்த அளவிற்கு பழனிவேல் தியாகராஜனிடம் ஆதாரம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நடவடிக்கை எடுக்க எடப்பாடி தலைமையில் மனு அளித்திருப்பதாகவும் வருகிற 22ஆம் தேதி பேரணியாக சென்று தமிழக ஆளுநர் ரவியிடமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த போகிறோம்.
இதையும் படிங்க: இந்த 12 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை - வானிலை மையம் அலெர்ட்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னவர்கள் இன்று அதிகமான கடைகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் கள்ளச்சாராயத்தையும் அதிகரித்துள்ளனர். கள்ளச்சாரயத்தால் இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய், கள்ளச்சாராயம் விற்றவர்களுக்கு 50,000 ரூபாய் என நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது வேடிக்கையாக உள்ளது.
கோவில் திருவிழாவில் உயிர் இழந்தவர்களுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டால் தரவில்லை. ஆனால் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்: சிவகுமார், மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.