Home /madurai /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா - தருமிக்கு பொற்கிழி அளித்த சுந்தரேசுவரர் கதை தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா - தருமிக்கு பொற்கிழி அளித்த சுந்தரேசுவரர் கதை தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆவணி மூல திருவிழாவை ஒட்டி தருமிக்கு பொற்கிழி அளித்த சுந்தரேசுவரர் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் மீனாட்சி அம்மன் போவிலில் நடைபெற்றது. அந்த புராண கதையை தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இதில் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூல திருவிழாவின் போது சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். ஆவணி மூலத்திருவிழாவின் போது சிவ பெருமானின் திருவிளையாடல் நிகழ்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி, சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் தினமும் சிறப்பு அலங்காரங்கள் நடந்து வருகின்றன. விழாவின் 4ஆம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை குறித்த புராண கதை :

    மதுரையை சூடாமணி பாண்டியன் என்று அழைக்கப்டும் செண்பகப்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தார். இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணம் மிகுந்த செண்பக மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தில் அரசி வந்தபோது ஒருவித புதிய வாசனையை மன்னன் உணர்ந்தார். அது தன் தேவியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அவர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டார்.

    இதனால், தனது சந்தேகத்தை போக்குபவர்களுக்கு 1,000 பொன் பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்து புலவர்கள் பலர் விளக்கம் அளித்தனர். ஆனால், மன்னனுக்கு சந்தேகம் தீரவில்லை. இந்நிலையில் தருமி என்ற ஒருவன் சொக்கநாதரை பூஜிக்க விரும்பினான். ஆனால் மணமான பிறகே சிவனை பூஜிக்கலாம் என்பதால் அரசன் அறிவித்த பரிசு தனக்கு கிடைத்தால் அதன் மூலம் தானும் மணம் புரிந்து, இறைப்பணி செய்யலாம் என்று கருதி இறைவனை வேண்டினான்.

    அவனது வேண்டுகோளை ஏற்று இறைவனே ஒரு பாடலை எழுதி, அந்த ஓலையை அவனுக்கு வழங்கினார். தருமியும் அந்த பாடலை சபையில் படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி, அந்த பொற்கிழியை அவருக்கு அளிக்க உத்தரவிட்டான். அப்போது தலைமைப்புலவரான நக்கீரர் குறுக்கீட்டு தடுத்து நிறுத்தி, அந்த பாட்டில் பிழை உள்ளது என்று கூறினார்.

    இதனால், இறைவன் புலவர் வடிவத்தில் சபைக்கு வந்தார். அங்கு தன் பாடலில் என்ன குற்றம் என்று கேட்க, நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் தொடர இறுதியாக இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்ற அறிந்த பின்னரும் நக்கீரர், ‘நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே’ என வாதாட இறைவனின் நெற்றிக் கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரை குளத்தில் நக்கீரர் விழுந்தார்.

    அதன்பின்னர் இறைவனும் மறைந்தார். இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப்புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன் மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி, பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரரை உயிர்ப்பித்து கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார். அதன்படி, நேற்று பொற்கிழி வழங்கிய லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மதுரை மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    சங்க இலக்கியமான குறுந்தொகையில், இறையனார் பாடிய புகழ்பெற்ற பாடல் இந்த புராண கதையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

    அந்தப் பாடல்,
    “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறிஎயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீயறியும் பூவே”.

    இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி - உலவாக்கோட்டை அருளியது, 3 ஆம் தேதி - பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், 4 ஆம் தேதி - வளையல் விற்றல், 5 ஆம் தேதி நரியை பரியாக்கியது, 6 ஆம் தேதி - பிட்டுக்கு மண் சுமந்த லீலை, இறுதி நாளான செப்டம்பர் 7ஆம் தேதி - விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி