1.வங்கி முன் நிறுத்திய பைக்கில் இருந்து ரூ. 3 லட்சம் திருட்டு! போலீசார் தீவிர விசாரணை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்டியை திறந்து ரூ. 3 லட்சம் திருடிய கும்பலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கிராம தலையாரியாக மாரியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வண்டியை நிறுத்தி வங்கியிலிருந்து ரூ. 3.50 லட்சம் பணத்தை எடுத்து இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டிக்குள் வைத்துவிட்டு அருகே இருந்த டீக்கடைக்கு சென்றுவிட்டார்.
திரும்பி 10 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியில் இருந்த ரூ.3- லட்சத்தை காணவில்லை. உள்ளே ரூ.50,000- உள்ள ஒரே ரூபாய் கட்டு மட்டும் உள்ளே கிடந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. உடனடியாக இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் மாரியப்பன் புகார் செய்தார்.
தகவல் கிடைத்தவுடன் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது 5 நபர்கள் இதில் கூட்டாகச் சேர்ந்து செய்திருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
2.வீடுகளில் வரையப்பட்டுள்ள வித்தியாசமான குறியீடுகளால் பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைவேலாயுதபுரத்தில் வீடுகளில் வரையப்பட்டுள்ள வித்தியாசமான குறியீடுகளால் பொதுமக்கள் பெரும் அச்சம்அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேலாயுதபுரத்தில் தனியார்பள்ளி அருகே உள்ள வீடுகளில் நல்லது, கேட்டது , வெரி குட் என வித்தியாசமான குறியீடுகள் கருப்புக் கரியினால் எழுதப்பட்டிருந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று இரவு வரை எந்த குறியீடுகளும் இல்லாத நிலையில் இன்று காலை குறியீடுகளை பார்த்ததால் இது ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் திருடர்களின் வேலையாக இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் எழுதப்பட்டுள்ள குறியீடுகளை புகைப்படம் வீடியோ எடுத்தும் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குறியீடுகளை நகர் காவல் நிலைய போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதனால் இப்பகுதி குடிஇருப்பவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே நகர காவல்துறை உடனடியாக இப்பகுதியில் பகல் மற்றும் இரவுநேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. கல்லூரி மாணவி உட்பட 3 பேர் மாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கல்லூரி மாணவி உட்பட மூன்று பெண்கள் மாயம் பெண்ணின் உறவினர்கள் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மாயமான அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகாசி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கல்லூரி சென்ற இளம்பெண் மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது பற்றி தெரிவயில்லை. இதுகுறித்து கருப்பசாமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
சிவகாசி நாகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு 3மகள்கள் உள்ளனர். இதில் இளம்பெண்ணான ஒரு மகள் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுபற்றி மகாலட்சுமி மாரனேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
விருதுநகர் நந்திரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலர்விழி. இவர் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் திருமணமான மகள் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி மலர்விழி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கர்ப்பிணி பெண்ணை தேடி வருகின்றனர்.
4. மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே முத்துராமப்பட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜா. இவர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். அவரை பணிநீக்கம் செய்து விட்டதால் லாரியை வாங்கி அதனை ஓட்டி வந்தார். அன்புராஜா லாரிவாங்குவதற்கு காமாட்சி என்பவர் ரூ. 2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதற்கான வட்டியை கடந்த 3 மாதங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அன்புராஜா வீட்டுக்கு காமாட்சி, வேலு ஆகிய இருவரும் வந்து பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அன்புராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
5. கலைஞர் வீடு வாங்கித் தருவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் மோசடி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவரிடம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வாங்கி தருவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம்பணமோசடி ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் (வயது 35), இவரிடம் நாகேந்திரன் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் விருதுநகர் ஊரக வளர்ச்சிதுறை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பணியாற்றுவதாகவும் ஊராட்சிக்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வீடுகள் போக கூடுதலாக வீடுகள் தேவைப்பட்டால் வீடு ஒன்றுக்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் செலுத்தினால்மேலும் வீடுகள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பி கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வேலை செய்துவருவதாக கூறிய நாகேந்திரன் கொடுத்த செல்போன் எண்ணிற்கு நாலு தவணையாக ரூபாய் 60 ஆயிரம் செலுத்தியதாகவும் பின்னர் பணத்தை பெற்றுக்கொண்ட நாகேந்திரன், கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் வாட்ஸ்அப் எண்ணிற்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை அனுப்பி வைத்துள்ளார்.
கிழவனேரிக்கு ஒதுக்கீடு செய்த ஆணையை எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் காரியாபட்டி வட்டாரவளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று காண்பித்தபோது இந்த ஆணை போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கிழவனேரி ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திக் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் இது போன்று வீடுகள் வாங்கிதருவதாக கூறி நாகேந்திரன் பல லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
6. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை-போலீஸ் தீவிர விசாரணை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரஸ்வதி (28) செந்தில்குமார் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் முனியாண்டி ( 35) அதே பகுதி வசித்து வந்தார். அவர் அடிக்கடி செந்தில்குமார் வீட்டுக்கு வந்து செல்வார்.
அப்போது செந்தில்குமார் மனைவி சரஸ்வதிக்கும், முனியாண்டிக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது.
இதனால் மன முடைந்த சரஸ்வதியும் முனியாண்டியும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமார் தனது மனைவியும், நண்பரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7. உணவகங்கள் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு பாலிதீன் பைகள் இறைச்சிகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள உணவகங்கள் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிக கலர்பொடி பயன்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் 50 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் உள்ள உணவுப்பொருட்கள் திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், வாகன நெருக்கடி அதிகம் உள்ள முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் ஏற்படும் புகை மற்றும் தூசிகள் திறந்து இருக்கும் உணவுகளின் படிந்து உணவுப்பொருட்களில் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து வத்திரா யிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், பேக்கரி ஆகியவற்றில் சாத்தூர் நகர உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மோகன் குமார், வத்திராயிருப்பு, சிவகாசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுப்பணியில் திறந்தவெளியில் உள்ள உணவுப்பொருட்களை முறையாக பாதுகாத்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் காலாவதியான பொருட்களை கைப்பற்றி அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஓட்டல்களில் கோழி இறைச்சியில் அதிக கலர்பொடி கலக்கப்பட்டு இருந்ததால் அந்த இறைச்சியினை கைப்பற்றி அழித்தனர். மேலும் கடைகளில் சுமார் 50 கிலோவுக்கு மேல் இருந்த பாலித்தீன் கவர்களை கைப்பற்றி கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
8. கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 பேர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக இறந்தனர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரும் அவரது நண்பரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் இருந்து கல்லுப்பட்டி நோக்கி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் என்ற பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இருவர் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.