விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
வேலாயுதபுரத்தில் வீடுகளில் வரையப்பட்டுள்ள வித்தியாசமான குறியீடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேலாயுதபுரத்தில் தனியார் பள்ளி அருகே உள்ள வீடுகளில் நல்லது, கெட்டது , வெரி குட் என வித்தியாசமான குறியீடுகள் கருப்புக்கரியினால் எழுதப்பட்டிருந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று இரவு வரை எந்த குறியீடுகளும் இல்லாத நிலையில் இன்று காலை குறியீடுகளை பார்த்ததால் இது ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் திருடர்களின் வேலையாக இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் எழுதப்பட்டுள்ள குறியீடுகளை புகைப்படம், வீடியோ, எடுத்தும் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குறியீடுகளை நகர் காவல் நிலைய போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதனால் இப்பகுதி குடியிருப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நகர காவல்துறை உடனடியாக இப்பகுதியில் பகல் மற்றும் இரவுநேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.