வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை
விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அடுத்த கோலியனுார் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா மனைவி பர்வீன்பேகம், 46; இவர், கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஈரோட்டில் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு, சென்றார். மீண்டும் நேற்று முன்தினம் இரவு திரும்பிவந்தபோது, வீட்டின் பின்பக்க கதவை திறந்து, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 7 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இவர் கொடுத்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மணிமேகலை விருது வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு
மணிமேகலை விருது வழங்குவது குறித்து பஞ்சமாதேவி, தொடர்ந்தனுாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி மற்றும் தொடர்ந்தனுார் கிராமங்கள் தமிழக அரசின் மணிமேகலை விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் ஆய்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் செல்வராசு, திருவண்ணாமலை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சையத் சுலைமான், மண்டல உதவி திட்ட அலுவலர் வில்லியம்ஸ் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
முன்விரோத தகராறில் தாக்கிக்கொண்ட நபர்கள்
முன்விரோத தகராறில் தாக்கிக்கொண்ட ஐந்துபேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் நந்தனர் தெருவை சேர்ந்தவர் பஞ்சாச்சரம் மகன் குமரவேல், 40; இவரது குடும்பத்தாரும், அவரது அண்ணன் முருகவேல், 46; குடும்பத்தாரும் பொது இடத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பான முன்விரோதத்தில் நேற்று தாக்கிக்கொண்டனர்.
இது குறித்து இருதரப்பு புகாரின்படி, முருகவேல், அவரது மனைவி கலைவாணி, 38; மற்றும் குமரவேல், அவரது மனைவி சிவரஞ்சனி, 36; பஞ்சாச்சரம் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பிளஸ் 1 தேர்வு ஆரம்பம்: 1288 பேர் ஆப்சென்ட்
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், 1288 பேர் ஆப்சென்டாகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 96 மையங்களில்,பிளஸ் 1 பொதுத்தேர்வை மொத்தம் 23 ஆயிரத்து 587 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த தேர்வில் 22 ஆயிரத்து 289 மாணவர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 1288 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
இதேபோன்று, தனித்தேர்வர்கள் 300 பேரில், 269 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். மீதமுள்ள 31 பேர் தேர்வு எழுதவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 13ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் பாலமுருகன் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 18 முதல் 30 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.
பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் கலந்து கொள்ளலாம்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் 96 கிராமங்களில் நடந்தது.
விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பத்தில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். இதுபோன்ற, சிறப்பு முகாம்களில் விவசாயிகள் முழு அளவில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி பயனடைய வேண்டும் என கலெக்டர் பேசினார்.
17- ஆம் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி காலை 10:30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை வகிக்கிறார். எனவே, மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஓய்வூதியம் குறித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.