கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஷவர்மா போன்ற துரித உணவுகளை தவிர்த்து நமது பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றி உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நகராட்சி பகுதியில் இயங்கும் 12 ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 3 கடைகளில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட ஷவர்மா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து 12 கிலோ ஷவர்மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து மூன்று கடைகளுக்கு கடை ஒன்றுக்கு 2 ஆயிரம் என ஆறாயிரம் அபராதம் விதித்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
ஷவர்மா தயாரிப்போர் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்:
உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவரிடம் மட்டுமே சிக்கன் போன்ற மூலப் பொருட்களை வாங்க வேண்டும், சிக்கனை மசாலாவுடன் கலக்கும் போது கையுறை அணிந்திருக்க வேண்டும்,
ஷவர்மா தயார் செய்யும் பணியாளரும் மற்ற பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதற்கான மருத்துவ தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்,ஷவர்மா அடுப்பு தூசிகள் படியுமாறு சாலை ஓரத்தில் இருக்கக்கூடாது,ஷவர்மா நன்கு வேக வைத்த பின்னர்தான் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்,
ஷவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் .அவ்வப்போது அடுப்பினை அணைத்து பயன்படுத்தக்கூடாது, அடுப்பில் வைத்து வெந்த 2 மணி நேரத்திற்குள் பரிமாற வேண்டும், அதுவரை அடுப்பு மிதமான வெப்பத்தில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்,தினந்தோறும் மீதமான ஷவர்மா பரிமாறாமல் அகற்றிவிடவேண்டும்,ஷர்மாவை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸில் வேக வைக்க வேண்டும்,சமைப்பவர் கைகள் படாமல் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும,ஷவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கியபடி இருக்க வேண்டும்.
இந்த அனைத்து வழிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் கண்டிப்பாக மூடப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதுமட்டுமல்லாமல், விழுப்புரம் நகர பகுதியான பாகர்ஷா, எம் ஜி ரோட்டில் செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட மாம்பழ கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழக்கடைகளில் மாம்பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் மற்றும் கார்பனேட் கல் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர்,பத்து பழக்கடைகளுக்கு 2 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் அபராதம் விதித்தும்,ஒரு டன் அளவிலான மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.