Home /local-news /

விழுப்புரம் பழமை வாய்ந்த கீழ்வாலை பாறை ஓவியம் - ஒரு பார்வை

விழுப்புரம் பழமை வாய்ந்த கீழ்வாலை பாறை ஓவியம் - ஒரு பார்வை

Ancient

Ancient Lower Tail Rock Painting - A Look !!

விழுப்புரம் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழ்வாலை என்ற கிராமம். இக்கீழ்வாலை கிராமம் சுற்றி பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக் குகைகள் காணப்படும்.

    விழுப்புரம்திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழ்வாலை என்ற கிராமம் . இக்கீழ்வாலை கிராமம் சுற்றி பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக் குகைகள் காணப்படும்.

    கீழ்வாலையில் தொல்பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தில் உருவான செஞ்சாந்துப் பாறை ஓவியங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தன.

    தொல்பழங்கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ள பாறைகளை இப்பகுதி மக்கள் 'இரத்தக் குடைக்கல்' என்று அழைக்கின்றனர். இரத்தச் சிவப்பில் அதாவது செஞ்சாந்து வண்ணத்தில் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளதால் இப்பாறைகளுக்கு இரத்தக் குடைக்கல் என்ற பெயர் வழங்கினர்.

    கீழ்வாலை ஓவியப் பாறைகளை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து மக்கள் வாழ்விடமாக இருந்து வந்துள்ளமைக்குச் சான்றாக அப்பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்புப் பானையோடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் பகுதிகளும் கிடைத்துள்ளன.

    மேலும் இந்த பாறை ஓவியங்கள் பற்றி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கூறுகையில், இந்த பாறை ஓவியங்கள் அனைத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு குதிரை வண்டியில் மனிதர்களே வரவேற்பது,படகு சவாரி செய்வது, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி கூறுவது, வணிகத் தொடர்பான குறியீடுகள், சூரியக்கடவுள் போன்ற பல ஓவியங்கள் செஞ்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளது.

    முதலில் மூன்று மனிதர்களும் ஒரு விலங்கும் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியத்தில் ஒரு மனிதன் குதிரையில் அமர்ந்துள்ளான். அவனது உடலில் நீண்ட ஆயுதம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக இடம்பெறும் பெண் உருவம்.குதிரைமேலுள்ள அந்த முதல் நபரை இந்தப் பெண்பூசாரி தாய்த் தெய்வத்திடம் அழைத்துச் செல்கிறாள்.

    எனவே இது தாய் வழிபாடாக இருக்கலாம்.கீழே 17 கிரணங்களோடு ( கதிர் வீசும் வரிகள்)சூரியன் வரையப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அத்தெய்வத்தை வணங்குகிறான்.

    மேலும்,நான்கு மனிதர்கள் படகில் செல்கின்றனர். நடுவில் ஒருவர் படகைச் செலுத்தும் நீண்ட தடியைக் கையில் பிடித்துள்ளார். நால்வரும் கைகளைக் கோர்த்தபடி படகில் நின்ற நிலையில் உள்ளனர். அனைவரும் ஒரே திசையைப் பார்த்தபடி உள்ளனர்.

    எனவே அவர்கள் வணிகம் தொடர்பாக செய்யலாம் எனவும் கூறப்படுகிறது, அதுமட்டுமல்லாமல், மனித உருவங்கள், சூரியன், விண்மீன், வில்அம்பு, சக்கரம், பறவை முதலான உருவங்களும் பலவகைக் குறியீடுகளும் தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த பாறை ஓவியத்தில் சிந்து சமவெளி குறியீடுகளும் காணப்படுகிறது.

    மேலும் இதுபோன்ற பொக்கிஷமே தொழிலாளர்கள் பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதனை பாதுகாக்க வேண்டும் எனவும் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கூறினார்.

    மேலும் இது போன்ற வரலாற்று சின்னங்களை இளைஞர்கள் முன்னெடுத்து பாதுகாக்க வேண்டும் என விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையை சேர்ந்த முதுகலை மாணவர்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Karthick S
    First published:

    Tags: Viluppuram S22p13

    அடுத்த செய்தி