திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் முழுவதுமாக நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய மழையின்றி குளம் நிரம்பாததால் மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை.
ஆனால் இந்த ஆண்டு போதிய நீர் நிரம்பி இருந்ததால் குளத்தின் மூலம் பாசன வசதிபெறும் ஆயக்கட்டு தாரர்கள் ரூ 11 ஆயிரத்திற்கு விரால், கட்லா போன்ற மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டனர்.
தற்போது மீன்கள் இனப்பெருக்கம் ஆகி குளத்தில் அதிக அளவிலான மீன்கள் இருந்த நிலையில் தண்ணீர் குறைந்து விட்டதால் இன்று மீன்பிடி திருவிழா அதிகாலை 6 மணிக்கு துவங்கியது. சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்றுசிங்கம்பட்டி ஆகிய மூன்று ஊர் நாட்டாண்மைகள் கரையில் நின்று வெள்ளை நிறத்துண்டை தலைக்கு மேல் சுழற்ற மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக நின்றிருந்த பொதுமக்கள் மீன்பிடிக்க உத்தரவு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் குளத்தில் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன் பிடிக்க துவங்கினர்.
15 நிமிடங்களில் குளத்தில் இருந்த மொத்த மீன்களையும் கொத்து கொத்தாக அள்ளிச் சென்றனர்.இதில் கட்லா, விரால், குரவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர்.
இந்த திருவிழாவில் சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்னுசிங்கம்பட்டி, சங்கிப்பட்டி, பொன்முச்சந்தி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
25 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த மீன்பிடி திருவிழாவில் அதிக அளவிலான மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
செய்தியாளர் - என்.மணிகண்டன்திருச்சி.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.