திருச்சி மாவட்டம்
திண்டுக்கல் சாலையில் புங்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த நெடுமலை கிராமத்தில் வாடிவாசல் கருப்பு கோயிலுக்கு அருகிலுள்ள களத்துமேட்டுப் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளி நடுவில் பாறையில் செக்குக்கல் ஒன்று எழுத்துப்பொறிப்புடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெடுமலை கிராமத்தைச் சேர்ந்த ஒர் இளைஞன் கொடுத்த தகவலின் அடிப்படையில்திருச்சியைச் சேர்ந்த கணித ஆசிரியர் பாலா பாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வெட்டை ஆய்வு செய்தனர்.
76 செண்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 செண்டிமீட்டர் உள்விட்டமும் கொண்ட இச்செக்கானது 13 செண்டிமீட்டர் விட்டத்தை கொண்ட துளையுடன் காணப்படுகிறது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானை போன்ற குழிவுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இச்செக்கில் மூன்று வரிகளுடன் கூடிய எழுத்துகளைக் கல்வெட்டாகப் பதித்துள்ளனர்.
கல்வெட்டு
எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இச்செக்கு கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். மேலும் இச்செக்கிற்கு வடமேற்கே 150 அடி தொலைவில் உள்ள மற்றொரு பாறையில் தலை உடைக்கப்பட்ட ஐயனார் சிற்பம் ஒன்றும் இருக்கிறது.
பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்து தருவது வழக்கம். மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணையை எடுத்துப் பயன்படுத்துவர்.
பொதுவாக திருச்சியில் செக்குக் கல்வெட்டுகள் அதிகம் கிடைக்காத நிலையில் இச்செக்குக் கல்வெட்டு முக்கியத்துவத்தைப் பெறுகிறது.இதன் பழமையையும், வரலாற்றுச் சிறப்பையும் கருதி இதைப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்கள் தமிழகத்தின் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைகிறது.
இதுபோன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கல்வெட்டுக்கள், தொல்லியல் புராதான சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் - என். மணிகண்டன்
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.