Home /local-news /

திருச்சியைப் பாதிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு- தீர்வு என்ன?

திருச்சியைப் பாதிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு- தீர்வு என்ன?

அரியமங்கலம் குப்பை கிடங்கு.

அரியமங்கலம் குப்பை கிடங்கு.

திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலத்தில் குவிந்துள்ள குப்பை கிடங்கை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

    திருச்சியைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட மாவட்டமாக அதை கொடுக்கும் வகையில் பல உள்ளன.
    திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை என்றாலே தமிழகத்தில் அனைவரும் அறிவார் .

    ஆனால் மலைக்கோட்டையை மிஞ்சும் அளவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு குப்பைக்கிடங்கு அரியமங்கலம் குப்பை கிடங்கு. திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஒரு குப்பை கிடங்கு என்றால் அது அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தான்.

    ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரியமங்கலம் குப்பைக்கிடங்கு ஆனது தினசரி திருச்சி காந்தி மார்க்கெட் கழிவுகளை கொட்டுவதற்கு தொடங்கப்பட்ட குப்பை கிடங்காக இருந்தது. கழிவுகளை வாங்குவதற்கு விவசாயிகள் வரிசை கட்டி நிற்பார்கள். அந்த கழிவுகளை தான் விவசாயிகள் பயன்படுத்தி வந்தார்கள்.

    இப்படி பல விவசாயிகள் இந்த கழிவுகளை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள் சேர்ந்து குப்பைகளின் கோட்டையாக திகழ்கிறது அரியமங்கலம் குப்பை கிடங்கு.

    திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கு என்பது 47.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.

    இதனால் குப்பையின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சராசரியாக 40 அடி உயரத்திற்கு குப்பைமேடாக மாறிவிட்டது. உயர்ந்த மலை போல் காட்சியளித்த இந்த குப்பை மேட்டில் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும். அந்த தீயையும் அதில் இருந்து வெளியேறும் புகையையும் கட்டுப்படுத்த தீயணைப்பு படை வீரர்களும், மாநகராட்சி, வருவாய் துறை ஊழியர்களும் வாரக்கணக்கில் கடுமையாக போராடுவார்கள்.

    அந்தக் காலகட்டத்தில் குப்பை கிடங்கை சுற்றியுள்ள மக்கள் அகதிகளாக தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைவார்கள். மழைக்காலங்களில் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் குடியிருப்பு வாசிகளுக்கு அலர்ஜி உள்ளிட்ட தோல் நோய்களையும், மூச்சு திணறலையும் ஏற்படுத்தும்.

    குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றியுள்ள கிடங்கை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீரை முற்றிலுமாக மாசுபடுத்திவிட்டது.

    தீர்வு

    கடந்த ஆட்சி காலத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 49 கோடி ரூபாய் செலவில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை 100% மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கப்பட்டது. அப்பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்தது. பின்னர் புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவும், அந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்கள்.

    அதன் விளைவாக சுமார் 65 விழுக்காடு குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக பிரிக்கப்பட்டுவிட்டன. அவை கிடங்கில் இருந்து தினமும் அகற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள எஞ்சிய 35 விழுக்காடு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டு காலமாக அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து என்பது ஏற்படவில்லை.

    மறு சுழற்சி செய்ததன் விளைவாக குப்பைமேடு கரைக்கப்பட்டுவிட்டது. தற்போது குப்பை கிடங்கின் பெரும்பகுதி தரைதளம் தெரியத் தொடங்கியிருக்கிறது.
    தினசரி குப்பைகள் வந்து குவிவதால் அதனை மறுசுழற்சி செய்வதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தனியார் நிறுவனம் வலியுறுத்துகிறது. இது குறித்து விரிவான திட்ட அறிக்கையை திருச்சி மாநகராட்சி தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் கே என் நேரு அறிவுறுத்தியுள்ளார்.

    இங்கு வரக்கூடிய குப்பைகளில் பெரிய பாறை கற்கள், இரும்பு பாட்டில்கள், டயர், பிளாஸ்டிக், செருப்புகள் உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. மக்கிய மண் துகள்கள் தனியாக பிரிக்கப்படுகிறது.

    மண் துகள்களை பள்ளங்களை நிரப்புவதற்காக அனுப்பி வைக்கின்றனர். மற்றவற்றை மறுசுழற்சி செய்வதற்காக அனுப்புகின்றனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட எரியும் பொருள்களை( RDF) முறையில் துண்டு துண்டாக நறுக்கி மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    திருச்சி நகராட்சியாக இருந்தபோது மக்கள் நடமாட்டம் இல்லாத அரியமங்கலம் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்டு நகரம் விரிவடைந்து நகரத்தின் மையத்தில் மக்கள் குடியிருப்புக்கள் அதிகமுள்ள இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது.

    குப்பைகளை ஒரே இடத்தில் சேகரித்து மறுசுழற்சி செய்ய கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. எனவே மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும், நுண் உர செயலாக்க மையத்தை உருவாக்கி, அந்தந்த பகுதி குப்பைகளை தொடக்க நிலையிலேயே தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதுதான் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என கருதப்படுகிறது.

    செய்தியாளர்- என்.மணிகண்டன், திருச்சி.
    Published by:Karthick S
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி