தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு பிறகு குழந்தைத் திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்க்காகவும் அவர்களின் நலனுக்காகவும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படுவதற்காக வாட்ஸ் அப் எண்ணை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு விதமான பெண் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் வளரிளம் பருவத்தினரிடையே ஏற்பட்டுள்ள முரண்பட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தவும் பல திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.
இதில் முதல் செயல்பாடாக குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர், குழந்தை கடத்தல், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தல், தெருவோர குழந்தைகள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தல் என்று பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பிரச்சனைகளை உடனடியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் விதமாக (
94861 11098) என்ற வாட்ஸ் ஆப் எண்ணை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எண்ணிற்கு உங்களது வாட்ஸ் அப் செயலியில் இருந்து HI என்று குறுஞ்செய்தி அனுப்பினால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து உங்களை தொடர்பு கொண்டு குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சரியான வழிகாட்டுதலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களது கைபேசியில் இந்த வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்து கொண்டு உங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் உங்களின் கவனத்திற்கு வரும்போது, உடனடியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்துங்கள்,
பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தரவேண்டும். இதனால் நாமக்கல் மாவட்டத்தை குழந்தை நேயமிக்க மாவட்டமாகவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத மாவட்டமாகவும் மாற்ற முடியும், மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை நம்மால் ஏற்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.