கோவையில் அடுப்பே இல்லாத 'ஃபாஸ்ட் ஃபுட்' கடையில், உடலுக்கு ஆரோக்கியமான, எண்ணை இல்லாத துரித உணவுகள் கிடைப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஃபாஸ்ட் ஃபுட்' என்றாலே கமகமவென மனமும், எண்ணெய்யில் பொறித்த வண்ணமயமான உணவுகளுமே நமது நினைவுக்கு வரும். சில நொடிகளில் தயாராகிவிடும் இத்தகைய துரித உணவுகளாலும் அதில் இருக்கும் எண்ணை, செயற்கை நிற கலவைகள் மற்றும் சுவையூட்டிகளால் உடலுக்கு எக்கச்சக்க பிரச்சனை என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
ஆனால், ருசிக்குப் பழக்கப்பட்ட நம் ஊர் மக்கள் இத்தகைய 'ஃபாஸ்ட் ஃபுட்' உணவுகளையே தேடிச் செல்கின்றனர். சுவை மட்டும் இருந்தால் போதுமா? ஆரோக்கியமும் அவசியம் என்று கருதும் ஒரு சிலரே இது போன்ற துரித உணவு வகைகளை தவிர்த்து வருகின்றனர். இதனிடையே, 'ஃபாஸ்ட் ஃபுட்'-லேயே சத்தான உணவை தயாரிக்க முடியும் என்று கூறி அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த சிவக்குமார் பால் பொருட்கள் மொத்த வியாபாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அடுப்பே வைக்காமல், எண்ணை கலவை இல்லாத துரித உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்தார்.
அந்த வகையில் அடுப்பு இல்லாமல், எண்ணெய் உபயோகம் சற்றும் இல்லாமல் நொடிப்பொழுதில் துரித உணவுகளைத் தயாரித்துக் கொடுக்கும் 'ஸ்பைசி ஸ்டெம்' என்ற கடையை கோவை ராம்நகர் பகுதியில் துவங்கியுள்ளார் சிவக்குமார்.
சீசனுக்கு தகுந்தார் போல் காய்கறிகளைக் கொண்டு துரித உணவு வகைகளை தயாரித்துக் கொடுக்கும் இவர் தற்போது வாழைத்தண்டு வைத்து மசால், வெள்ளரிக்காய் மற்றும் கேரட் கொண்டு சாலட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், "தமிழகத்தில் எங்கும் இதுவரை வாழைத்தண்டு மசால் என்று எங்கும் துரித உணவு தயாரிக்கப்படவில்லை. முற்றிலும் எண்ணை இல்லாத, சமைக்காத நிலையிலும் இந்த வாழைத்தண்டு மசாலை சாப்பிட முடியும்.
வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்தை இழக்கும் அனைவரும் தினமும் இந்த வாழைத்தண்டு மசாலை சாப்பிடலாம். வாழைத்தண்டு மசால் மற்றும் சாலட் வகைகளை ரூ.30க்கு விற்பனை செய்கிறேன். அடுத்தடுத்து உடலுக்கு நன்மை பயக்கும் உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்வேன். எந்த நேரத்திலும் லாப நோக்கோடு மக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யமாட்டேன்." என்றார்.
லாப நோக்கத்திற்காக உயிருடன் விளையாடும் துரித உணவுகளுக்கு மத்தியில் சிவக்குமார் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு கோவை மக்கள் ஆதரவு அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.