Home /local-news /

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்.. 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி.. கோவையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்.. 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி.. கோவையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

கோவையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Coimbatore District: கோவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம் 

    கோவையில்  நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

    தனியார் - அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்

    கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அரசு பேருந்து ஓட்டுநரை அடித்ததாகக் கூறி அரசு பேருந்து ஓட்டுநர்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் அவதியடைந்தனர்.

    கொரோனா காலத்தில் இரண்டு துறைகள் வளர்ந்தன - கோவை எம்.பி பேச்சு

    கொரோனா காலத்தில் மருத்துவம் மற்றும் பஞ்சாலைத்துறையினர் அதிக அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளதாகவும், மூன்றாம் அலை எப்போது வரும் என்று அவர்கள் காத்திருப்பதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற ஓய்வூதியர்கள் மாநாட்டில் அவர் இவ்வாறு பேசினார்.

    27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

    கோவையில் ஞாயிறன்று நடைபெற்ற 29வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக 1,736 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 19 ஆயிரத்து 76 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 5,017 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தவிர. 15 முதல் 18 வயதிலான குழந்தைகள் 1,177 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்த சிறப்பு முகாமின் மூலம் மொத்தம் 27 ஆயிரத்து 6 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    குடிபோதையில் குழியில் விழுந்து இறந்த தொழிலாளி

    கோவை நெகமத்தை அடுத்த வெள்ளாளபாளையம பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (65). கூலித்தொழிலாளியான காளிமுத்து தனது மனைவியிடம் கடைக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றார். குடி போதையில் சென்ற அவர் அனுப்பர்பாளையம் பிரிவில் தோண்டப்பட்டு இருந்த குழியில் தவறி விழுந்தார். அவரை தேடிய போது குழியில் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

    தக்காளி காய்ச்சல் எதிரொலி - கேரள எல்லையில் சோதனை

    கேரளாவில் தக்காளி காய்ச்சல் எதிரொலியாக கோவையில் தமிழக-கேரள எல்லையான வாளையாறு, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர், மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்திலிருந்து பேருந்துகள், கார்கள் மற்றும் பைக்குகள் மூலம் கோவை வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் , சளி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா? கைகளில் கொப்பளம் இருக்கிறதா என்று பரிசோதித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    வயிற்றில் வைத்து போதை மருந்து கடத்தி வந்த பெண்

    கோவையில் அயன் திரைப்பட பாணியில் உகண்டாவில் இருந்து போதை மாத்திரிகளை விழுங்கி விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து பார்த்த போது 81 மாத்திரை குப்பிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    ரயிலில் அடிபட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

    கோவை ரத்தினபுரி அருகே செக்கான் தோட்டம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் விசாரணையில் இறந்தவர் ரத்தினபுரியை சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பதும், பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி