இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்று நாம் குடியரசு தலைவரை குறிப்பிடுவோம். அரசியல் ரீதியாக இந்தியாவின் தலைவர் என்ற பதவியும் குடியரசு தலைவருக்கே உரியது. நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் எல்லாம் அவரது பெயரில் தான் வெளியிடப்படுகிறது. அவரது சம்மதம் இருந்தால்தான் எந்த சட்டமும் இங்கு அமலுக்கு வரும்.
இவ்வளவு பொறுப்புகளையும் அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் குடியரசு தலைவர் வீட்டை பார்க்கும் ஆர்வம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் தானே? டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் ராஷ்ட்ரபதி பவன் மாளிகையை வருடத்தின் சில நாட்களுக்கு மக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
டெல்லி மட்டும் அல்லாது ஆங்கிலேயர் காலத்தில், மேலும் 2 இடங்களில் வைஸ்ராய் தங்கி பணியாற்ற மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் சிம்லாவிலும், தெற்கு பகுதி வேலைகளை செய்ய செகந்திராபாதிலும் மாளிகைகள் கட்டப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் இவை குடியரசுத்தலைவர் மாளிகைகள் ஆனது. இந்த இரண்டு மாளிகைகளுக்கும் கூட வருடத்தின் சில நாட்கள் மக்கள் சென்று பார்வையிட அனுமதி இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 22 முதல் வருடம் முழுவதும் செகந்திராபாத், போலாரத்தில் உள்ள 162 ஆண்டு பழமையான பாரம்பரிய ராஷ்டிரபதி நிலையம் பொது மக்கல் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வீடியோ கான்பரன்சிங் மூலம் இதைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொண்டார்.
மாளிகையில் முக்கியமாக ஜனாதிபதி அலுவலகம், உணவருந்தும் பகுதி மற்றும் கட்டிடத்தின் மையத் தொகுதி என்று அனைத்து முக்கிய இடங்களையும் மக்கள் பார்க்கலாம். திறப்பு விழாவில் குடியரசு தலைவர் முர்மு, ‘நமது இளம் தலைமுறையினர், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி அறிந்து, நமது சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய விழுமியங்களை மதிக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி.
இந்த யோசனையுடன், ராஷ்டிரபதி நிலையத்தில் ராஷ்டிரபதி பவன் மற்றும் நிலையத்தின் வரலாறு மற்றும் நமது சுதந்திரத்தின் பாடப்படாத ஹீரோக்கள் பற்றிய தகவல்களை வழங்கும் அறிவு தொகுப்பு நிறுவப்பட்டுள்ளது. மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், நிலையத்திற்கு வருகை தந்து தங்கள் பாரம்பரியத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு’ தெரிவித்தார்.
ஆர்ட் கேலரி : பார்வையாளர்கள் இப்போது ராஷ்டிரபதி பவன் மற்றும் ராஷ்டிரபதி நிலையத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள, ஜனாதிபதிகளால் பெறப்பட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் இராஜதந்திர பரிசுகளையும் அவர்களின் பதவி மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவல்களை வழங்கும் கேலரி பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நிலத்தடி சுரங்கப்பாதை: ராஷ்டிரபதி நிலையத்தின் சமையலறையை சாப்பாட்டு அறையுடன் இணைக்கும் நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக பார்வையாளர்கள் உலாவலாம். இது தற்போது அற்புதமான நாட்டுப்புற கலை படங்களால் வர்ணம் பூசப்பட்டுள்ளது .
வளாகம்: ஜெய் ஹிந்த் ராம்ப் மற்றும் கொடி கம்பத்திற்கு பார்வையாளர்கள் நடந்து செல்லலாம். இது பலதரப்பட்ட தாவரங்களையும் கொண்டிருக்கும். பார்வையாளர்கள் இப்போது தங்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த இடத்தின் தகவல்களைப் பெறலாம்.
இதையும் பாருங்க; மத நல்லிணக்கத்தை காட்டும் இந்த மேற்கு வங்காள மடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
தோட்டங்கள்: பார்வையாளர்கள் இப்போது ராஷ்ட்ரபதி நிலையத்தை சுற்றி உள்ள ராக் கார்டன், ஹெர்பல் கார்டன், பட்டாம்பூச்சி தோட்டம் மற்றும் நக்ஷத்ரா கார்டன் ஆகியவற்றை ரசிக்கலாம்.
இந்த இடத்தை பார்வையிட விரும்பும் மக்கள் ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://visit.rashtrapatibhavan.gov.in மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். அல்லது இங்கு வந்து முன்னாள் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் டிக்கெட்டுகளை உடனே பதிவு செய்யலாம்.ராஷ்டிரபதி நிலையத்தின் வரவேற்பு அலுவலகத்திலும் வாக்-இன் முன்பதிவு வசதி இருக்கும்.
இந்திய குடிமக்களுக்கு ஒரு நபருக்கு ரூ 50 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ 250 பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராஷ்டிரபதி நிலையம் குடியரசுத் தலைவரின் தெற்குப் பயணம் தவிர, ஆண்டு முழுவதும் திங்கள் மற்றும் பிற அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும், கடைசி நுழைவு மாலை 4 மணிக்கு இருக்கும்.
ராஷ்டிரபதி நிலையத்தில் இலவச பார்க்கிங், ஒரு ஆடை மாற்றும் அறை, சக்கர நாற்காலி அணுகல், ஒரு உணவகம் , நினைவு பரிசு கடைகள், ஓய்வறைகள், குடிநீர் வழங்கும் சாதனங்கள், முதலுதவி வளாகம் மற்றும் இலவச வழிகாட்டி சுற்றுப்பயணங்கள் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: President, Secunderabad S29p08, Travel