நிலவை பார்த்து அதில் ஓரு பாட்டி வடை சுட்டுவதாக கதை சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் அந்த நிலா என்ன விலை சொல்லுங்கள். இப்போதே ராக்கெட் எடுத்து போய் பார்த்து வருகிறேன் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எலான் மஸ்க்கின் spacex நிறுவனம் ஏற்கனவே பல வெற்றிகரமான விண்வெளி சுற்றுலா பயணங்களை நடத்திவிட்டது. மற்ற விண்வெளி நிறுவனங்களும் அதை பின்பற்றி விண்வெளி சுற்றுலாவிற்கு தயாராகி வருகிறது.
ஒரு ஹாலிவுட் படத்தை விட கம்மி பட்ஜெட்டில் செவ்வாய்க்கே ராக்கெட் விட்ட நம்ம இஸ்ரோ மட்டும் சும்மா பார்த்துக் கொண்டு இருக்குமா என்ன? இஸ்ரோவும் 2030 ஆண்டில் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்து செல்லும் தொழிநுட்பத்தை சோதனை செய்து வருகிறது. பாதுகாப்பான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளிபயணத் தொகுதிகளை இஸ்ரோ சொந்தமாக தயாரித்து வருகிறது.
2030 இல் தொடங்க திட்டமிட்டுள்ள சுற்றுலா திட்டம் குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோம்நாத் கூறும்போது, “இந்த பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பும்படியான தொகுதிகள் தயாரிக்கும் பணி வேகம் எடுத்து வருகின்றன. விரைவில் முழு அமைப்புகளும் உருவாக்கப்பட்டு சோதனைகளும் நடைபெறும்” என்றார்.
சரி விண்வெளிக்கு நம்மை அழைத்து செல்ல எவ்வளவு கட்டணம் ஆகும் என்று தானே அடுத்து யோசிக்கிறீர்கள். அதையும் அவர்களே தோராயமாக சொல்லி விட்டார்கள். ‘இந்த விண்வெளி சுற்றுலாவிற்கு ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 6 கோடி ரூபாயாக இருக்கும். ஆனால் இது சந்தையில் உள்ள மற்ற சுற்றுலா பயணத்தில் விலைகளை பொறுத்து மாறுபடும்’ என்று தெரிவித்துள்ளனர்.
6 கோடி டிக்கெட் கொடுத்து போகும் பயணம் எவ்வளவு தூரம் இருக்கும் என்ற ஆவல் நம் மனதை பிராண்டும். நிலவு வரை அழைத்துச்செல்வார்களா என்ற பேராசை எல்லாம் கூடாது. ஏற்கனவே இருக்கும் spacex, ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்கள் தங்கள் மறுபயன்பாடு நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் பூமியை தரைமட்டத்தில் இருந்து உயர்ந்து வளிமண்டலத்தின் விளிம்பில் உள்ள துணை சுற்றுப்பாதையில் 15 நிமிடம் குறைந்த புவிஈர்ப்பு விசை நிலையை அனுபவிக்க வாய்ப்பளித்து வருகிறது.
இஸ்ரோவின் விண்வெளி சுற்றுலாவும் கிட்டத்தட்ட இந்த அளவை தான் எட்டும். விண்வெளியின் விளிம்பில் நின்று அதை உணர்ந்து விட்டு திரும்பும் பயணமாக தான் அமையும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமும் விண்வெளி சுற்றுலா திட்டமும் ஒருங்கே வேகமாக உருவம் பெற்றுக்கொண்டு வருகின்றன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் விண்வெளிப் பயணத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை மேம்படுத்துகின்றன. ஏனெனில் அவை ஒன்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்குச் செல்லும் திறன் கொண்டவையாக இருந்து நமது செலவீனத்தை குறைக்கும். இதனால் அடுத்து ஒதுக்கப்படும் பணத்தில் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்ய முடியும்.
விண்வெளிப் பயணத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர், விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு குறித்த கூடுதல் அறிவைப் பெற மறுபயன்பாட்டு லான்ச் வெஹிக்கிள் - டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டரை (ஆர்எல்வி-டிடி) பயன்படுத்துகிறோம் என்றார். இதனால் சாமானிய மக்களும் பாதுகாப்பாக பயம் இன்றி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : உலகில் சுற்றுலா பயணிகள் குறைவாக செல்லும் நாடு எது தெரியுமா?
விண்வெளி சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் இப்போது இருந்தே உங்கள் சேமிப்புகளை தொடங்குங்கள். 6 கோடி சேமிக்க வேண்டாமா? 2030 இல், இஸ்ரோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலாவிற்கு ஒரு டிக்கெட்டை போட்டுவிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.