இஸ்தான்புல்லில் இருந்து கிளம்பி 22 ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை கடந்து லண்டனுக்கு பேருந்தில் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை, "உலகின் மிக நீண்ட பேருந்து பயணம்" என்று அறிவிக்கப்பட உள்ள இந்த பயணத்தை கையாள்வது இந்திய பயண நிறுவனமான அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட், என்று சொன்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?
ஆம் மக்களே. உண்மை தன இந்திய நிறுவனமான அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் உலகம் முழுவதும் பல்வேறு பயண திட்டங்களையும், பேக்கேஜ்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு படியாகத் தான் இந்த முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது. பயணங்களில் புதிய சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்த நிறுவனம் துருக்கியில் இருந்து இங்கிலாந்து தீவை விமானம் மூலம் அல்லாமல் பேருந்தில் கடக்க முடிவு செய்தது.
இதுவரை, பெருவின் லிமா மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை இணைக்கும் பயணமான 6,200 கிமீ பேருந்து பயணம் தான் உலகின் மிக நீண்ட பேருந்து பயணமாக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த சாதனையை தற்போது அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் பயண திட்டம் முறியடித்துள்ளது. இந்த பயணம் நிறைவடைதால் இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்கு செல்லும் இந்த 12,000 கிமீ பயணம் தான் புதிய உலகின் மிக நீண்ட பேருந்து பயணமாக மாறும்.
சரி பயணம் தொடங்கிவிட்டதா? இனி தான் தொடங்க இருக்கிறதா, நாங்களும் போகலாமா? என்று நீங்கள் கேள்விகளை அடுக்குவது புரிகிறது. எல்லா விபரங்களையும் சொல்கிறோம். லண்டனுக்கான பேருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி லண்டனை வந்தடையும்.
ஆகஸ்ட் மாதம் புறப்பட திட்டமிடப்பட்டுள்ள இந்த சொகுசு பேருந்து பயணம் துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் தொடங்கி பால்கன், கிழக்கு ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா மற்றும் மேற்கு ஐரோப்பா வழியாக பயணம் செய்து ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான லண்டனுக்கு போய் சேரும்.
இதற்கு இடையே கடல் பாதையை கடக்க நோர்வே ஃபிஜோர்ட்ஸைச் சுற்றி ஒரு கப்பல் பயணம் மற்றும் பின்லாந்து வளைகுடா பகுதியில் ஒரு கப்பல் பயணம் செல்லவேண்டி இருக்கும். ஆனால் நிலப்பரப்புக்கு வந்ததும் அதே பேருந்து தனது பயணத்தைத் தொடரும். இந்த பேருந்து பயணத்தின் மூலம், ஐரோப்பா கண்டத்தின் வடக்கே அமைந்துள்ள வடக்கு கேப் பகுதி வரை நீங்கள் பயணிக்கலாம்.
56 நாட்கள் பயணிக்கப்போகும் இந்த சொகுசு பேருந்தில் 30 பயணிகள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த மொத்த பயணத்திற்கும் சேர்த்து $24,300 செலவாகும். அதாவது இந்திய ரூபாய்க்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 20 லட்சமாகும். இந்த டிக்கெட் தொகையில் தினசரி காலை உணவு, 30 மதிய உணவுகள் மற்றும் இரவு உணவுகள் மற்றும் அனைத்து ஹோட்டல் தங்கும் இடங்களும் அடங்கும்.
அண்ணாநகரில் இருந்து டீ நகருக்கு வருவதற்குள் பஸ்ஸில் நசுங்கி நஞ்சுபோய் வருகிறோமே 56 நாட்கள் பயணிக்கும் பேருந்து என்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனை மண்டைக்குள் ஓடுகிறதா? 56 நாட்கள் எப்படி ஒரே பேருந்தில் அமர்ந்துகொண்டு வருவது.இந்த பயணத்திற்கு பயன்படுத்த இருப்பது வசதியான நீண்ட தூர பயணத்திற்காக உருவாக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட சொகுசு பேருந்து என்பதால் இதில் பயணம் செய்யும் போது களைப்பு தெரியாது.
இதையும் பாருங்க: இந்தியாவில் உள்ள உலகின் மிக ஆபத்தான ட்ரெக்கிங் ஸ்பாட்.. சாகச விரும்பிகள் மிஸ் பண்ணக்கூடாத இடம்..!
பயணிகள் பயணம் முழுவதும் சாய்வான அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகளில் நன்றாக படுத்து ஓய்வெடுக்க முடியும். அதோடு பொழுதுபோக்கிற்கு படம் பார்க்க AUX மற்றும் USB போர்ட்கள், மடிக்கக்கூடிய டேபிள்கள் மற்றும் பாட்டில் மற்றும் கப் ஹோல்டர்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பயணிகளும் தங்களுடன் இரண்டு முழு அளவிலான சூட்கேஸ்களை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். 56 நாட்களுக்கு தேவையானதை அதில் எடுத்து செல்லலாம். என்ன டிக்கெட் போட்டு விடலாமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, World record