அருங்காட்சியகம் என்று சொன்னதும் நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை வைத்துள்ள இடம் அல்லது ஓவியங்கள் அல்லது கலை பொருட்கள் விக்கப்பட்டுள்ள இடம் போன்ற காட்சிகள் தான் கண்முன் வரும். அதை மீறி யோசித்தால் உடைந்த உறவுகளை பற்றிய கிரோஷியா நாட்டு அருங்காட்சியகம், டெல்லியில் உள்ள கழிவறை அருங்காட்சியகம் போன்றவை நினைவுக்கு வரும்.
ஆனால் இதை விட வித்தியாசமான ஒரு அருங்காட்சியகத்தை பற்றி தான் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். யாராவது தங்களது முடியை அருங்காட்சியகத்தில் வைத்து பார்த்திருக்கிறீர்களா? இல்லை ஒரு அருங்காட்சியகம் முழுவதும் முடி இருப்பதை யோசித்திருக்கிறீர்களா? ஆனால் துருக்கி நாட்டில் ஒரு முடி அருங்காட்சியகம் உள்ளது.
துருக்கியின் கப்படோசியாவில்(Cappadocia) உள்ள ஒரு சிறிய நகரம் அவனோஸ்(Avanos). இந்த நகரம் மட்பாண்டங்கள் மற்றும் செராமிக் பாண்டங்களுக்கு பிரபலமானது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமாகும். இருப்பினும், அப்பகுதியின் புகழ்பெற்ற பீங்கான் கடைகளில் ஒன்றின் அடித்தளத்தில், முற்றிலும் வேறுபட்ட ஒரு குகை போன்ற இடத்தில கூந்தல் நிறைந்த அறை அருங்காட்சியகமாக மாறி உள்ளது.
இந்த குகை அமைப்பில் மட்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது. என்ன இது முடிகளை போய் காட்சி படுத்தி வைத்திருக்கிறார்களே! வீட்டில் 1 துண்டு முடி இருந்தால் கூட அள்ளி வெளியில் வீசுவார்கள். இவர்கள் இத்தனை ஆயிரம் பேரின் முடிகளை வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கலாம்.
இந்த மனித முடி மாதிரிகளின் வித்தியாசமான அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது. துருக்கிய குயவரான கலிப் கோருக்சு(Galip Körükçü)அவனோஸ் வீதியில் ஒரு மட்பாண்ட கடை வைத்துள்ளார். அவருடைய நீண்ட நாள் தோழி சில காரணங்களால் அவனோஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளார். மிகவும் அன்பான தோழி விடைபெறுவதை நினைத்து வருந்திய கலிப்புக்கு தோழி தனது தலைமுடியை நினைவுப் பரிசாக கொடுத்து சென்றுள்ளார்.
அதை அவர் பத்திரமாக தனது கடைக்கு கீழே இருக்கும் சுரங்க குகைக்குள் பத்திரமாக வைத்துள்ளார். அதன் பின்னர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த கதையைக் கூறியுள்ளார். அதன்பின்னர். இந்த சோகமான கதையைக் கேட்ட ஒவ்வொரு பெண்ணும் அவரது கடைக்கு வந்து, தனது தலைமுடியையும் அவருக்கு வழங்கினர். ஏறக்குறைய 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அருங்காட்சியகம் பல்வேறு வண்ண முடிகளின் தொகுப்பைக் குவித்துள்ளது.
நிலத்திற்கு அடியில் உள்ள குகை அமைப்பில் இவை அனைத்தையும் கலிப் சேகரித்து வைத்துள்ளார். நீங்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தவுடன், தரையைத் தவிர அனைத்து மேற்பரப்பிலும் முடி-நினைவுச் சின்னங்கள் மற்றும் அதனுடன் இணைந்த குறிப்புகள் மூடப்பட்டிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த விசித்திரமான கண்காட்சியில் சில பெண்கள் தங்கள் புகைப்படத்தையும் விட்டு சென்றுள்ளனர். இப்படி அந்த அரை முழுக்க நிரம்பியுள்ளது.
அதன் பின்னர், கலிப்பின் இந்த தலைமுடிகள் தொகுப்பு அருங்காட்சியகம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. அதே போல இந்த இடத்தில இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்களின் முடிகள் இவ்வளவு சீராக வளர்ந்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தான் பம்பர் பரிசு. இது வணிக ரீதியாக அவர் செய்த முன்னெடுப்பு என்றால் அதன் மூலம் இந்த இடம் மேலும் பிரபலமானது.
ஜூன் மற்றும் டிசம்பர் என்று வருடத்திற்கு இரண்டு முறை, குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் காலிப் கடைக்குள் நுழையும் முதல் வாடிக்கையாளரை,அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று, சுவரில் இருந்து 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க சொல்வார். அந்த 10 நபர்களுக்கு தனக்கு ஆதரவு தந்ததற்காக நன்றி தெரிவித்து, கப்படோசியா சுற்றி பார்க்கும் மொத்த செலவையும் அவரே ஏற்பார். அது மட்டும் இல்லாமல் மட்பாண்டங்கள் செய்வதில் அனுபவம் பெற்ற இவரிடம் இலவசமாக மட்பாண்டங்கள் செய்யவும் கற்றுக் கொள்ளலாம்.
இதையும் பாருங்க: பயணத்தின் பின் ஏற்படும் முகக் கருமையை தவிர்க்க சில டிப்ஸ்..!
நிச்சயமாக, கடைக்குள் நுழையும் ஒவ்வொரு பெண்ணும் தனது தலைமுடியை விட்டுச்செல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒரு சிறிய நன்கொடை செய்ய விரும்பினால், கத்தரிக்கோல், காகிதம், பேனாக்கள் மற்றும் டேப் அனைத்தும் வழங்கப்படும். முடி அருங்காட்சியகம் மட்டும் அல்லாமல் இவரது மட்பாண்ட கடையும் துருக்கிய கைவினைப் பொருட்களின் பாரம்பரிய பாணி வரலாற்று, சமகால, மலர் மற்றும் வடிவியல் வடிவமைப்புகளுடன் அற்புதமான கையால் செய்யப்பட்ட மட்பாண்ட தொகுப்பை வைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair, Travel, Travel Guide