இந்தியாவில் சில ரயில்களும் ரயில்நிலையங்களும் தனித்துவமான கதைகளை தன்னோடு வைத்திருக்கும். கூட்டமான ரயில் நிலையம், ஆளே இல்லாத ரயில் நிலையம் , அமைதியான ரயில் நிலையம், உலகின் உயரமான ரயில்நிலையம் என்று எல்லாம் கேட்டிருப்போம். ஆனால் நங்கள் சொல்ல போகும் ரயில் நிலைய கதையே வேறு ரகம்!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜே அருகில் தயாள்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் பிரயாக்ராஜ் அருகிலுள்ள தயாள்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் டிக்கெட் வாங்குகிறார்கள். ஆனால் அதில் யாரும் பயணிப்பதில்லை. சொல்லப்போனால் அந்த இடத்தில ரயில் நிற்பது கூட இல்லை.
நிற்காத ரயில் நிலையத்தில் பயணிக்காமல் எதற்கு டிக்கெட் வாங்குகிறார்கள் என்ற கேள்வியால் இந்த நிலையம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கிராமவாசிகள் இப்படி செய்வதற்குப் பின்னால் ஒரு சிறிய சுவாரஸ்யமான கதை உள்ளது. அந்த கதையை இப்போது பார்ப்போம்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பப்படி அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியால் தயாள்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. 1954 ஆம் ஆண்டு இந்த தயாள்பூர் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
பல தசாப்தங்களாக சுற்றுவட்டார மக்களின் பயண வழிமுறையாக இருந்த இந்த நிலையம் 2016 இல் மூடப்பட்டது. இதற்குக் காரணம், இந்திய ரயில்வே சில தரங்களை நிர்ணயித்துள்ளது, மேலும் ஒரு நிலையம் அவற்றைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் அது மூடப்படும்.
மெயின் லைனில் ஒரு ஸ்டேஷன் இருந்தால், தினமும் குறைந்தது 50 டிக்கெட்டுகள் வாங்கப்பட வேண்டும் என்பது விதி. அதுவே, ஒரு நிலையம் ஒரு கிளை வரிசையில் இருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே நிர்ணயித்த வருவாய் தொடர்பான தரநிலைகளை பூர்த்தி செய்யாததால், தயாள்பூர் ரயில் நிலையம் மூடப்பட்டது.
ரயில் நிலையம் மூடப்பட்ட பிறகு, தயாள்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க பல முறை விண்ணப்பித்துள்ளனர். இறுதியாக 2022 இல், ரயில்வே அமைச்சகம் இந்த நிலையத்தை மீண்டும் திறந்தது. இதையடுத்து, இந்த நிலையத்தை மூட அனுமதிக்க மாட்டோம் என, இப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதையும் பாருங்க: ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!
இங்குள்ள மக்கள் தங்களுக்குள் நிதி திரட்டி ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச டிக்கெட்டுகளை விற்கும் இலக்கை பூர்த்தி செய்துவிடுகின்றனர். இருப்பினும், இந்த நிலையம் தற்காலிக நிறுத்தமாக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தயாள்பூர் ரயில் நிலையத்தில் 1-2 ரயில்கள் மட்டுமே நிற்கும். இருந்தாலும் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையம் மூடப்பட்டுவிட கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Railway Station, Travel