கோடை காலம் தொடங்கி தனது கொடூர வெப்பத்தை வைத்து நம்மை சுட்டு எரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மலை பிரதேசங்களையும் மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
இப்படி தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணார், ஏற்காடு, கொல்லி மலை, ஜவ்வாது மலை, சிறு மலை என்று எல்லா பக்கமும் மக்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியாக வாகனம் எடுத்து சுற்றி எல்லாராலும் செலவு செய்ய முடியாது. அதனால் அரசே ஒரு அற்புதமான சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது . அப்படி கொடைக்கானலில் எந்த இடங்களை எல்லாம் இந்த சுற்றுலா பேக்கேஜில் பார்க்க முடியும் என்பதை சொல்கிறோம்.
இந்த சுற்றுலா பேருந்து கொடைக்கானலில் இருந்து தான் தொடங்குகிறதா என்று யோசிக்க வேண்டாம். திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில் தான் அசத்தலான சுற்றுலா ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
இதை குறிப்பிட்ட நகரங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களில் விசாரித்து முன்பதிவு செய்துகொள்ளலாம். கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சரி எந்த இடங்களை எல்லாம் பார்க்கலாம் என்று பார்ப்போம்.
சொல்லப்போனால் கொடைக்கானலில் முக்கிய இடங்களுக்கு எல்லாம் இந்த பஸ் நம்மை அழைத்துச்செல்லும்.
1. லேக் வியூ பாயிண்ட்
2. மோயர் பாயிண்ட்
3. பைன் காடுகள்
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கோல்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. பிரையண்ட் பார்க்
12. கொடைக்கானல் ஏரி
இந்த 12 சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை விட என்ன வேண்டும் சொல்லுங்க. இறுதியாக ஏரியில் நம்மை இறக்கிவிடுவார்கள். அங்கே போட்டிங் எல்லாம் போய்விட்டு நம் ஊருக்கு கிளம்ப சரியாக இருக்கும். அணைத்து வயதினருக்கும் ஏற்ற நிறைவான சுற்றுலாவாக இது அமையும்.
இந்த பேக்கேஜுக்கு ஒரு நபருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளில் 'இயற்கை எழில் காட்சி' Natural Scene என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள்.
மேலும் ஒவ்வொரு இடத்திலும் சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை பார்த்து ரசிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவிலான மக்கள் இந்த சுற்றுலா அனுபவத்தை விரும்புகின்றனர்.இந்த ஆஃபர் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் செயலில் இருக்கும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 150 ரூபாய்க்கு 12 இடங்களை முழுமையாக , பொறுமையாக சுற்றி பார்க்க முடியும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இன்றே உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNSTC, Travel, Travel Guide