இன்றைய இளைய சமூகத்திடம் அமெரிக்க சீரிஸ்க்கு அடுத்தபடியாக கொரியன் சீரிஸ்கள்தான் தற்போது பிரபலமாகி வருகிறது. குறைவான எபிசோடுகள் உள்ளதால் பிரபலமாகத் தொடங்கிய இந்த சீரிஸ்கள் காதல், அரசியல், திரில்லர், கிரைம் என்று எல்லா வகைகளிலும் வருகின்றன. ‘சராங்கே’ என்று கொரியன் ஹார்ட்டுகள் விடும் இளைஞர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஆர்வத்தைக் கூட்டும்.
ஆம் மக்களே சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக வடகொரியா- தென்கொரியாவை பிரிக்கும் முன்னர் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாக இருந்த மண்டலத்தில் (Demilitarised Zone)(DMZ ) 11 அமைதிப் பின்னணியிலான 'அமைதி கருப்பொருள் நடைபாதைகளை '(peace-themed hiking trails) ஏப்ரல் 21 முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று தென்கொரிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை கூறியது.
1950-53 கொரியப் போர் ஒரு சமாதான உடன்படிக்கையில் அல்லாமல் ஒரு நிரந்தர உரசல்களுடன் முடிவடைந்தது. இதனால் தென்கொரிய- வடகொரியா எல்லை என்பது உலகின் மிகவும் வலுவூட்டப்பட்ட எல்லைகளில் ஒன்றாகும். இதை எப்போதும் அதீத காவல் படையுடன் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணுவம் வெளியேறிய எல்லையில் உள்ள கங்வா, ஜிம்போ,கோயாங், பாஜு(Paju), யோஞ்சியோன்(Yeoncheon), சியோர்வோன்(Cheorwon), ஹ்வாச்சியோன்(Hwacheon), யாங்கு(Yanggu), இன்ஜே (Inje) மற்றும் இரண்டு ராணுவ தலங்கள் கொண்ட கோசோங்(Goseong )- ஆகிய 10 நகரங்களில் இந்த சுற்றுலா பாதை அமைய இருக்கிறது.
ராணுவம் வெளியேறிய இந்த பகுதி, சுமார் 250 கிலோமீட்டர் நீளம் மற்றும் 4 கிமீ அகலம் கொண்டது. போர் பதற்றம் நீடிக்கும் இந்த இடத்திற்கு அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் உதவியுடன் உலா வர அனுமதிக்க இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து அப்பகுதியின் சுற்றுச்சூழல், கலாச்சார மற்றும் வரலாற்று விழுமியங்களைப் பற்றி அறியும் அதே வேளையில், சுதந்திரம் மற்றும் அமைதியின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஒவ்வொரு பகுதியும் பயணிகள் நடந்து அல்லது காரில் பயணிக்கக்கூடிய பிரிவுகளைக் கொண்டது. பெரும்பாலான பிரிவுகள் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக வாகனத்தில் பயணிக்கப்பதாக கொடுக்கப்படுகின்றன. சில பகுதிகள் நடைபயிற்சிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2019 இல் சோதனை அடிப்படையில் பாஜு, கோசோங் மற்றும் சியோர்வோனில் மூன்று ஹைகிங் பாதைகளை அரசாங்கம் திறந்தது. ஆனால் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மற்றும் COVID-19 தொற்றுநோய் காரணமாக அவற்றை தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது.
நவம்பர் 2021 இல் ஐந்து புதிய வழிகள் சேர்க்கப்பட்டன, ஆனால் புலம்பெயர்ந்த பறவைகளின் பாதுகாப்பிற்காகவும் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும் முழு திட்டமும் விரைவில் மீண்டும் மூடப்பட்டது. ஆனால் 11 பாதைகளும் அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் பாருங்க: இலங்கையில் தொடங்க உள்ள ராமாயண சுற்றுலா.. எந்தெந்த இடங்களையெல்லாம் பார்க்கலாம்..?
சுற்றுப்பயணங்களுக்கான ஆன்லைன் முன்பதிவுகள் வெள்ளிக்கிழமை முதல் கொரியா சுற்றுலா அமைப்பால் நடத்தப்படும் DMZ பீஸ்(peace) ரோடு இணையதளமான www.dmzwalk.com இல் கிடைக்கும் என்று அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: North and south korea, South Korea, Travel, Travel Guide