நெருப்பும் பனியும் ஒரே இடத்தில் இருந்து பார்த்து இருக்கிறீர்களா? அது எப்படி இருக்க முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். இருக்கிறதே! மணிகரன் எனுமிடத்தில் ஒருபுறம் பார்வதி ஆற்றில் உறையும் குளிர்ந்த நீரும் மறுபுறம் கொதிக்கும் வெந்நீர் ஊற்றுமாக நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2650 மீட்டர் அல்லது 7956 அடி உயரத்தில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் நகரில் உள்ள சிவன் ஆலயம் மற்ற கோவில்களை விட நிச்சயம் வினோத கதைகளையும் அமைப்புகளையும் கொண்டுள்ளது. பார்வதி நதி ஓடிக்கொண்டிருக்கும் இடத்தை ஒட்டியே ஒரு வெந்நீர் ஊற்று எப்போதும் கொதிக்கும் நீரை உமிழ்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த கொதிக்கும் நீரூற்றுகள் சிலநேரத்தில் 10 முதல் 15 அடி உயர நீரூற்றை உருவாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீரூற்றுகளிலிருந்து வெவ்வேறு நிறங்களின் கற்களும் வெளியேறுகின்றன. வெவ்வேறு நீரூற்றுகளின் வெப்பநிலை 65 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.
இதற்கு சில புராண கதைகளும் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுக்கு முன், சிவலோகத்தில் இருந்து வந்த சிவனும் பார்வதியும் இந்த இடத்தின் அழகால் ஈர்க்கப்பட்டு இங்கேயே குடியேறினார்களாம். பல ஆண்டுகள் இந்த இடத்தில் தவம் புரிந்த அவர்கள் ஒரு நாள் இங்குள்ள நதியில் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது பார்வதியின் ஆபரணம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பார்வதியின் ஆபரணங்களை தேட சிவலோக பூதகணங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் எங்கு தேடியும் நகை கிடைக்காததால், கோவம் அடைந்த சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். மூன்றாம் கண்ணின் வெப்பத்தால், இந்த இடத்தில் வெப்பமான நீர் ஊற்றுகள் உருவானதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த ஊற்றில் இருந்து பல நகைகள் வெளியே வந்துள்ளன. பார்வதி தனது நகையை மட்டும் எடுத்துவிட்டு மாற்றத்தை கல்லாக்கியதாக கதைகள் கூறுகின்றன.
இன்றும் இந்த ஊற்றில் இருந்து பல்வேறு நிறங்களில் கற்கள் வெளியே வருவதாக கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் இராமாயணத்தில் ராமர் அடிக்கடி இந்த அக்கோவிலுக்கு வந்ததாகும், மணாலிக்கு அருகில் உள்ள குரு வசிஷ்டரின் குடிலுக்கு சென்று வருவார் என்றும் கூறுகின்றது. அதே போல மஹாபாரத கதையும் காண்டீபம்- வில் பெற்ற அஜுனனை சிவன் சோதித்த இடமாக இது கருதப்படுகிறது.
இந்து சமயத்திற்கு மட்டும் அல்லாமல், சீக்கிய சமூகத்திற்கும் இது முக்கியமான தலமாக உள்ளது. சீக்கிய குருவான குருநானக் தங்கி தியானம் செய்த இடமாக இந்த இடம் குறிப்பிடப்படுகிறது. அதனால் சிவன் - பார்வதி கோவிலுக்கு அருகிலேயே சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் பாலம் ஒன்றும் உள்ளது. இந்த 2 கோவில்களுக்கும் இந்த வெந்நீர் ஊற்றில் இருந்து தான் பிரசாதம் சமைக்கப்படுகிறது.
அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை இந்த நீரில் சமைத்து பரிமாறுகின்றனர். இந்த தனித்துவ நீரில் சமைத்த பொருட்களை சாப்பிட சுவையாக இருக்கும். இந்த வெந்நீர் ஊற்றில் நீராடுவதால் மூட்டுவலி மற்றும் பிற நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தண்ணீரில் நேரடியாக பத்திரத்தை வைத்தும் சமைக்கலாம் அந்தளவு சில சமயம் சூடாக இருக்கும்.
இந்த நகரத்தின் மற்றொரு அம்சம் தசரா பண்டிகை. உலகப் புகழ்பெற்ற குலு தசரா விழா கொண்டாட்டங்கள், மன்னர் ஜகத் சிங் ஆட்சியின் போது, மணிகரனில் தொடங்கியது. குலு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் தசரா கொண்டாட மணிகரனுக்கு வருகை தருகின்றனர்.
குலு அல்லது மணாலியில் இருந்து இந்த இடத்தை எளிதில் அடையலாம். குலுவில் உள்ள பூந்தர் விமான நிலையத்தை அடைந்தவுடன் அங்கிருந்து சாலை மார்க்கமாக நீங்கள் மணிக்கரனை அடையலாம். நீங்கள் ரயில் வழியாக இங்கு வருகிறீர்கள் என்றால், சண்டிகர் ரயில் நிலையத்தில் இருந்து டாக்சி எடுத்துக் கொள்ளலாம். மணாலியில் இருந்து மணிக்கரனுக்கு செல்ல ரூ.700 டாக்ஸி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Himachal Pradesh, Travel