ரயில் டிக்கெட் பதிவு என்பது சிரமமான வேலை. ரயில் டிக்கெட் எளிதில் கிடைக்காது என்று தான் நாம் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மை இல்லை. அந்த டிக்கெட் பதிவு செய்யும் டெக்னீக் தான் நமக்கு தெரிவதில்லை. ஆனால் எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்கு சொல்லாமல் எப்படி. டெக்னீக் என்னவென்று பார்த்துவிடலாமா!
தினமும் ஐஆர்சிடிசி மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள், ஆனால் இந்த தந்திரத்தைப் பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். பொதுவாக கடைசி நேரம் ஆகிவிட்டால், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் பொதுவாக தட்கல் சேவை மூலம் புக் செய்வோம்.
ஆனால், வார இறுதி நாட்களிலோ அல்லது பண்டிகைக் காலத்திலோ தட்கலில் கூட டிக்கெட் கிடைப்பது கடினம். இத்தகைய சூழ்நிலையில், காத்திருப்பு டிக்கெட்டில் பயணம் செய்வதும் மிகவும் கடினமான விஷயம். பொது வகுப்பு பெட்டியில் சில சமயங்களில் உட்காரக்கூட இடம் கிடைக்காது.
ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, இருக்கும் பிரச்சனை நேரம் தான். தொடங்கிய 10 நிமிடங்களில் இருக்கைகள் நிரம்பிவிடும். என்ன தான் வேகமான நெட்ஒர்க் வைத்திருந்தாலும் பயணிகளின் விவரங்களை நிரப்புவது, பணம் செலுத்துவது என்று சேர்ந்து அதிக நேரம் எடுக்கும். அதற்குள் தட்கல் ஒதுக்கீடு முடிந்துவிடும்.
ஆஃப்லைன் தட்கல் டிக்கெட் வாங்க விரும்பினால், நீங்கள் ரயில்வே கவுண்டரின் நீண்ட வரிசையில் காத்துகொண்டு நிற்க வேண்டும். ஒருவேளை அங்கேயும் கொஞ்சம் தாமதம் ஆனால் , அங்கிருந்தும் வெறுங்கையுடன் தான் வர வேண்டும். எவ்வளவு சிக்கல் ஒரு டிக்கெட் வாங்குவதற்கு...
இதைத்தாண்டி எப்படி கன்பார்ம் டிக்கெட் வாங்குவது என்று தான் சொல்லப் போகிறோம். ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவில் மாஸ்டர் லிஸ்ட் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்ற ஆப்ஷன் இருப்பதைப் பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் அது தான் நமக்கு காய் கொடுக்கும் பிரஹ்மாஸ்திரம்.
மாஸ்டர் லிஸ்ட் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றால் என்ன?
ஐஆர்சிடிசியின் மாஸ்டர் லிஸ்ட் ஆப்ஷனைப் பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தட்கலை விட அதிகமாகும்.
மாஸ்டர் லிஸ்ட் அல்லது முதன்மை பட்டியல் என்பது IRCTC இன் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் இருக்கும் ஒரு வகையான அம்சமாகும். நீங்கள் முதன்மை பட்டியலில் பயணப் பட்டியலை உருவாக்க பயணம் தொடர்பான தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும். முன்பதிவு தொடங்கும் முன் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் உள்ளிட்டால், டிக்கெட் முன்பதிவு தொடங்கும் போது இந்த தகவலை உள்ளிடுவதில் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நேரடியாக முதன்மை பட்டியலைத் தேர்ந்தெடுத்தால் போதும்.
மாஸ்டர் பட்டியலை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் நாங்கள் உங்களுக்கு சொல்லித் தருகிறோம். முதலில் IRCTC இல் உள்ள உங்கள் கணக்கில் உள்நுழையவும், அதில் MY Master List என்பதைக் கிளிக் செய்யவும். முதன்மை பட்டியல் முன்பு உருவாக்கப்படவில்லை என்றால், எந்த பதிவும் காணப்படவில்லை என்று வரும்.
இதையும் பாருங்க: ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்... இதைப் பண்ணுங்க போதும்..!
அதற்குப் பிறகு Add Passenger என்பதைக் கிளிக் செய்யவும். அதில் பயணம் மேற்கொள்ளப்போகும் பயணிகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து Add Passenger என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது பயணிகளின் விவரங்கள் சேமிக்கப்பட்டு விடும்.பின்னர் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 'எனது பயணிகள் பட்டியல்' என்பதற்குச் சென்று அதை நேரடியாக இணைத்தால் போதும்.
நொடிகளில் பயண விபரங்களை நிறைவு செய்து விடலாம். அதன் பின்னர் என்ன பேமெண்ட் மட்டும் தானே upi செயலியில் முழு பயண டிக்கெட்டுக்கான பணம் இருந்தால் நொடிகளில் வேலை முடிந்து விடும் . உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கையில் கிடைத்து விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train, Travel Guide