பனிப்பொழிவு என்றால் ஒன்று துருவ பகுதிகள் பக்கம் மனசு செல்லும் அல்லது கனடா, ஐரோப்பிய நாடுகள் பக்கம் போகும். அதையும் தாண்டி இந்தியாவிற்குள் என்று யோசிக்கும்போது இமயப்பகுதிகளான ஜம்மு, லடாக், ஹிமாச்சலம், உத்தரகண்ட் , சிக்கிம் போன்ற இடங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் தென்னிந்தியாவிலேயே பனிப்பொழிவை பார்க்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதுவும் ரொம்ப தூரத்தில் இல்லை. சென்னையில் இருந்து 6-7 மணி நேர பயணத்தில் செல்லக்கூடிய இடம் தான். அண்டை மாநிலமான ஆந்திராவில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் லம்பாசிங்கி என்ற மலை முகடு கிராமம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் ஆண்டுக்கு ஒரு முறை பனிப்பொழிவு மழைபோல நிகழ்கிறது.
ஆந்திராவின் காஷ்மீர் என்று சொல்லப்படும் லம்பாசிங்கி, விசாகப்பட்டினத்தின் அரக்கு பள்ளத்தாக்கின் சிந்தப்பள்ளி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1025 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலை கிராமம் ஆகும். இந்த இடம் கொர்ரா பயலு என்றும் அழைக்கப்படுகிறது, இதன் பொருள், "யாராவது திறந்த வெளியில் இருந்தால் அவர்கள் குச்சியைப் போல உறைந்து போவார்கள்!".
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இந்த கிராமத்தின் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைகிறது. அப்படி வெப்பநிலை குறையும் போது தென்னிந்தியாவின் காஷ்மீர் என்ற சொல்லுக்கு அர்த்தம் கிடைக்கும் வகையில் தென்னிந்தியாவின் இந்த அப்பகுதியில் பனிப்பொழிவு நிகழ்கிறது. அப்போது இந்தப்பகுதி முழுவதும் பனியால் மூடப்படுகிறது.
குளிர்காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும், இந்த சிறிய கிராமம் ஒரு மிதமான காலநிலையுடன் கூடிய அற்புதமான இயற்கை காட்சியுடன் காணப்படுகிறது. வெயில் காலத்தில் மற்ற இடங்களை விட இந்த கிராமம் கூடுதல் குளிர்ச்சியை அனுபவிக்கிறது. இதனால் ஆந்திர மாநில மக்கள் வெயில் காலத்திலும் குளிர்காலத்திலும் இந்த இடத்தை நோக்கி அதிகம் படை எடுக்கின்றனர்.
பசுமையான பள்ளத்தாக்கு, குளிர்ச்சியான வெப்பநிலை, இயற்கை அழகு ஆகியவற்றால் நிரம்பிய லம்பாசிங்கி, சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக நம்மை வரவேற்கிறது. அதோடு இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் குறைந்த மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும், மிளகு மற்றும் காபி தோட்டங்களில் ஈடுபடும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின சமூகத்தின் தாயகமாக இது உள்ளது.
வெறுமனே பனிப்பொழிவை மட்டுமல்ல லம்பாசிங்கியில் சுற்றிப் பார்ப்பதற்கும் லம்பாசிங்கி வியூபாயின்ட், தஜங்கி ரிசர்வாயர், கொத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி, சூசன் கார்டன்,ஏரவரம் நீர்வீழ்ச்சி, அன்னாவரம், அரக்கு பள்ளத்தாக்கு என ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன.
இந்த இடத்திற்கு ஆண்டு முழுவதும் செல்லலாம். அனைத்து காலத்திலும் குளுகுளு ஸ்பாட்டாகத்தான் இது இருக்கும். ஆனால் நீங்கள் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நவம்பர் - ஜனவரி மாதங்களில் செல்ல வேண்டும். அதற்கு பின் பனிப்பொழிவு இருக்காது.
இதையும் பாருங்க :Caravan tourism | கர்நாடகாவை இனி இந்த நடமாடும் சொகுசு வாகனத்தில் சுற்றிப்பாருங்க !
லம்பாசிங்கி கிராமத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு பொது பேருந்துகள் அதிகமாகவே இயக்கப்படுகின்றன. அது போக தனியார் டாக்சி அல்லது கேப் மூலமாகவும் 110 கிமீ பயணித்து கிராமத்தை அடையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Kashmir, Travel, Travel Guide