ஆறு முதல் அறுபது வரை உள்ள அனைவருக்கும் ரயில் பயணம் என்றால் பிடிக்கும். நீண்ட தூரம் செல்லும் பயணம், நண்பர்கள் அல்லது குடும்பமாக சேர்ந்து போகும் பயணம் என்றால் ரயிலில் செல்வதுதான் சிறந்த வழியாக இருக்கும் . ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது தான் குதிரைக்கொம்பு போன்றது.
ஆன்லைனில் டிக்கெட் வாங்கியிருந்தால் அதன் நகல் உங்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டிருக்கும். அல்லது உங்கள் லாகின் ஐடி வைத்து அதிகாரபூர்வ ஆப்/ இணைய முகவரியில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு சில நேரங்களில் நேரில் சென்று டிக்கெட் எடுப்போம்.
சீசன் நேரம் அல்லது பண்டிகை நேரம் என்றால் அதற்கு ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் முன்னரே டிக்கெட் எடுக்க வேண்டும். இல்லையென்றால் டிக்கெட் தீர்ந்துவிடும். வெயிட்டிங் லிஸ்ட் 100 ஐத் தாண்டி போய்க்கொண்டு இருக்கும். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் அபராதம், சிறை அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும்.
இதை மீறி பலமுறை கன்பார்ம் டிக்கெட் கிடைத்தாலும், டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, டிக்கெட் எங்காவது தொலைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில் என்ன நடக்கும். புதிதாக டிக்கெட் வாங்கச் சென்றால், கன்பார்ம் டிக்கெட் கிடைக்காது. டிஸ்கிட் எடுத்தும் அதை காணாமல் பதற்றம் அதிகரித்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்போம்.
ஆனால் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. ரயிலில் ஏறுவதற்கு முன்பு உங்கள் டிக்கெட் எங்காவது தொலைந்துவிட்டால், இனி நீங்கள் பயப்படத் தேவையில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகளின் நலனுக்காக ரயில்வே டூப்ளிகேட் டிக்கெட்டை வழங்குகிறது.
இருப்பினும், வெவ்வேறு வகுப்புகளின் டூப்ளிகேட் / நகல் டிக்கெட்டுகளை பெறுவதற்கான விதிகள் மற்றும் கட்டணங்களில் வேறுபாடுகள் உள்ளன. முதலில் உங்கள் டிக்கெட் தொலைந்துவிட்டால், ஸ்டேஷனில் உள்ள பயணிகள் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொள்ளலாம். டிக்கெட் விபரங்களையும் பதிவு விபரங்களையும் பெற்றுக்கொண்டு டிக்கெட் கவுண்டருக்குச் சென்று நகல் டிக்கெட்டை உருவாக்கலாம்.
ஆனால் தொலைத்த டிக்கெட்டுக்கு பதில் டூப்ளிகேட் டிக்கெட்டைப் பெற நீங்கள் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும். டிக்கெட் தொலைத்ததற்கான அபராதமாக இது வசூலிக்கப்படுகிறது என்று சொல்லலாம். எந்த வகை வகுப்புக்கான டிக்கெட்டை தொலைத்தீர்கள், எந்த வகுப்பு டிக்கெட் மற்றும் நீங்கள் எப்போது டிக்கெட்டைப் பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அபாரதத் தொகை மாறுபடும்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrail.gov.in ல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டயர் ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு டூப்ளிகேட் டிக்கெட் ரூ.50 அபராதம் செலுத்திய பின்னர் வழங்கப்படும். இதற்கு மேல் உள்ள பிரிவினருக்கு, 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
அதுமட்டும் இல்லாமல் ரயில் புறப்படும் முன்னர் சார்ட் தயாரித்த பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் தொலைந்துவிட்டால், நீங்கள் கட்டணத்தில் 50% ஐ அபராதமாக செலுத்த வேண்டும். டிக்கெட் கிழிந்தாலும் டூப்ளிகேட் டிக்கெட் எடுக்கலாம். இதற்கு டிக்கெட் தொகையில் 25% செலுத்த வேண்டும். காத்திருப்பு/ வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்கு நகல் டிக்கெட் கிடையாது.
தொலைந்து போன டிக்கெட் கிடைத்தால் என்ன செய்வது?
உங்கள் தொலைந்த டிக்கெட்டை ரயில் ஏறும்முன் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், இரண்டு டிக்கெட்டுகளையும் கவுண்டரில் காட்டி, டூப்ளிகேட் டிக்கெட்டுக்கு செலுத்திய பணத்தை திரும்பப் பெறலாம்.
இதையும் பாருங்க : ரயில் பயணிகளுக்கு இலவச உணவு கிடைக்கும்... ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது..!
ஒருவேளை ரயிலில் ஏறிய பின் டிடிஇ செக் பண்ண வருவதற்கு முன் டிக்கெட் தொலைந்துவிட்டால், உங்களுடன் வைத்திருக்கும் அடையாளச் சான்றிதழை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டுங்கள். உறுதி செய்யப்பட்ட சீட் பெற்றவர்களின் பெயர் பட்டியல் அவரிடம் இருக்கும். உங்கள் பெயர் பட்டியலில் இருக்கும் பெயரோடு பொருந்தினால் , டிக்கெட் பரிசோதகர் உங்களுக்கு ஒரு சீட்டைக் கொடுப்பார் அல்லது உங்கள் டிக்கெட் சரிபார்க்கப்பட்டதாக அறிவிப்பார். அதன் பின் கவலை இல்லாமல் பயணம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Travel Guide, Travel Tips