20 அடி உயரம் உள்ள 2 மாடி வீட்டைக் கட்டுவதற்கே எத்தனை அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் போடவேண்டும் என்று கணக்கு போட்டு தோண்டுவார்கள். கட்டிடம் எந்த சூழலிலும் இடிந்து விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த அஸ்திவாரங்கள் தோண்டப்படுகின்றன. ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் ஒரு கோட்டையே கட்டி இருக்கிறார்கள் தெரியுமா?
ராஜஸ்தானின் வரலாற்றில் ஜாலவார் மாவட்டம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அங்கு இரண்டு பக்கம் தண்ணீராலும், ஒரு பக்கம் மலையாலும், ஒரு பக்கம் அகழிகளாலும் சூழப்பட்ட காக்ரோன் கோட்டை உள்ளது. இந்தத் கோட்டை ராஜஸ்தான் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எந்த அடித்தளமும் இல்லாத ஒரே கோட்டையாக இருக்கிறது.
ஜலவர் காக்ரோன் கோட்டை 7 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ளது. இதன் முதல் முழு வடிவம் 12 ஆம் நூற்றாண்டில் தோட் மன்னர் பிஜல்தேவ் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. அடுத்த 300 ஆண்டுகளுக்கு, கிஞ்சி ராஜபுத்திரர்கள் இங்கு ஆட்சி செய்தனர். 13 ஆம் ஆண்டில், முகலாய ஆட்சியாளர் அலாவுதீன் கில்ஜி இந்த கோட்டையைத் தாக்கினார். அப்போது அங்கு இருந்த ராஜபுத்திரர் ஜெய்த்சிங் கிஞ்சியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னர் இது முகலாயர்கள் ஆட்சியின் கீழ் வந்தது.
அதன் பின்னர் முகலாயர்கள் ஆட்சியின் கீழ், 14 ஆம் நூற்றாண்டில், காக்ரோன் கோட்டை ஒரு வளமான சமஸ்தானமாக மாறியது. ஆனால் மால்வாவிலிருந்து வந்த முஸ்லீம் ஊடுருவல்களால், 1423 ஆம் ஆண்டில், ஹோஷாங் ஷா மற்றும் சில பணக்கார மன்னர்கள் இந்த கோட்டையை தனது 30,000 இராணுவத்துடன் சுற்றி வளைத்து, அதன் மீது தனது வெற்றிக் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.
காக்ரோன் கோட்டையின் சிறப்பு என்னவென்றால் அதன் அரண்கள் தான். ராஜஸ்தானின் அனைத்துக் கோட்டைகளும் பொதுவாக 2 அரண்களைக் கொண்டிருக்கும். ஆனால் காக்ரோன் கோட்டையில் 3 கோட்டை அரண்கள் உள்ளன. மேலும், இந்தக் கோட்டைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதில் ஒன்று ஆற்றை நோக்கியும் மற்றொன்று மலையை நோக்கியும் உள்ளது.
இந்த கோட்டைக்கு மூன்று பக்கம் தண்ணீர் என்று சொன்னோம் அல்லவா? அது 2 நதிகளின் நீர். ஜாலவார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை காளி சிந்து மற்றும் அஹு நதியின் சங்கமத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான் அதன் இரண்டு பக்கம் இயற்கையாகவும் மூன்றாவது பக்கம் செயற்கை அகழியாலும் நீர் சூழ்ந்துள்ளது.
இந்த கோட்டையில் ஒரு காலத்தில் 92 கோவில்கள் இருந்ததாகவும், 100 வருட பஞ்சாங்கமும் இங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வரலாற்று கதைகளின் படி இந்தக் கோட்டையின் வரலாற்றில் மொத்தம் 14 போர்களும் 2 ஜவ்ஹர்களும் நடந்ததால், இப்போது கோட்டை மட்டுமே எஞ்சியுள்ளது. இது தவிர, கோட்டைக்குள் திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ், ஜனானா மஹால், மதுசூதன் கோயில், ரங் மஹால் போன்ற பல முக்கியமான வரலாற்று இடங்கள் உள்ளன.
அஸ்திவாரம் இல்லாத இந்த திடமான கோட்டையின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவம் கருதி 2013 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இக்கோட்டை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையோடு ராஜஸ்தானின் 5 மலை கோட்டைகளும் யுனெஸ்கோவால் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இந்த கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகில் முகலாயர்கள் மற்றும் அதன் பின்னர் வந்த இஸ்லாமியர்கள் காலத்தில் உருவான சூஃபி துறவி குவாஜா ஹமினுதீன் சிஷ்டியின் தர்கா உள்ளது. கோட்டைக்கு வெளியே சூஃபி துறவி மித்தே ஷாவின் தர்கா (சமாதி) உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் காலத்தில் இங்கு சிறப்பு திருவிழா மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
ராஜா பிரதாப் ராவ் 1338 முதல் 1368 வரை காக்ரோனை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் இது ஒரு வளமான சமஸ்தானமாக மாறியது. பின்னர் அவர் ஒரு சன்யாசி ஆனார், அவர் சந்த் கபீர் தாஸ் மற்றும் அவரது குருபாயின் சமகாலத்தவர். இவரின் மடமும் இந்தக் கோட்டைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இதையும் பாருங்க: பல புவிசார் குறியீடுகள், வரலாற்றுத்தலங்கள் நிறைந்த மத்தியப் பிரதேசத்தின் ஒற்றை நகரம்..!
காக்ரோன் நீர் கோட்டையை எப்படி அடைவது?
காக்ரோன் கோட்டைக்கு செல்ல விரும்பும் மக்கள், அருகிலுள்ள ரயில் நிலையம் ஜலவர் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து 2 கிமீ பயணித்தால் கோட்டையை அடைந்து விடலாம். விமானம் மூலம் வந்தால் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனம் மூலம் 345 கிமீ பயணம் செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajastan, Travel, Travel Guide