என்னதான் இன்றைய சமூகம் கூட்டத்திற்கு நடுவில் தனிமையை உணர்ந்து சுற்றினாலும், எத்தனை நாட்களுக்கு நீங்கள் தனிமையில் இருக்க முடியும்? அதுவும் சூரிய ஒளி கூட இல்லாத ஒரு குகைக்குள் இருக்க சொன்னால்..! சிரமமாக இருக்கும் தானே? ஆனால் 50 வயது ஸ்பெயின் நாட்டு பெண்மணி 500 நாட்கள் மனிதத் தொடர்பு இல்லாமல் வாழ்ந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14, 2023 அன்று ஸ்பெயின் நாட்டிற்கு அருகே உள்ள கிரனாடா என்ற 70 மீட்டர் ஆழம் கொண்ட சூரிய வெளிச்சம் புகாத குகையில் இருந்து பீட்ரிஸ் ஃப்ளாமினி என்ற 50 வயது பெண்மணி வெளியே வந்துள்ளார். வரும் போது ஒரு உலக சாதனையை முறியடித்த மகுடத்தை சூடி வந்துள்ளார். அதுதான் மக்கள் தொடர்பின்றி 500 நாட்கள் குகையில் வாழ்ந்தது.
அல்மேரியா, கிரனாடா மற்றும் முர்சியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மனித மனமும் உடலும் தீவிர தனிமை மற்றும் பற்றாக்குறையை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து வந்துள்ளனர். அப்போது மனித தொடர்பு இல்லாமல் வாழ்தல் மனிதனுக்கு என்னென்ன உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தை உண்டாக்கும் என்பதை அறிய ஒரு சோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த சோதனைக்காக ஒருவரை குகைக்குள் வாழவிட்டு அதை கண்காணிக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்கள் குகைக்குள் வாழவேண்டும் என்பதால் ஒரு விளையாட்டு வீரரை தேடியுள்ளனர். அப்போது தான் கதைக்குள் ஃப்ளாமினி வந்துள்ளார். அப்போது 48 வயதாக இருந்த ஃப்ளாமினி இந்த சோதனைக்கு ஒப்புக்கொண்டார். இவருக்கு தேவையான அடிப்படை வசதிகள் குகையில் செய்யப்பட்டன.
எல்லாம் தயாராக, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நவம்பர் 20, 2021 சனிக்கிழமை அன்று ஸ்பெயின் நாட்டு விளையாட்டு வீரர் மற்றும் மலையேறும் வீராங்கனையான ஃப்ளாமினி கிரனாடாவிற்கு வெளியே உள்ள குகையில் உள்ள தனது ஸ்டிஜியன் தங்குமிடத்திற்குள் நுழைந்தார்,
சிறப்பு, வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச செய்தியிடல் தொழில்நுட்பம் மூலம் ஃப்ளாமினி உடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவசர தேவைகளுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளும் இந்த சாதனம் தாண்டி ஒன்றரை வருடங்கள் ஃப்ளாமினி யாரிடமும் பேசாமல் வாழ்ந்துள்ளார். வெளியில் என்ன நடந்தாலும் தன்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர் வெளியில் வரும்போது 2021 மனநிலையிலேயே உள்ளார்.
குகையில் இருந்து வெளியே வந்த பிறகு, "நான் இன்னும் நவம்பர் 21, 2021 இல் சிக்கிக்கொண்டேன். எனக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது." 500 நாட்கள் குகைக்குள் இருந்தது வித்தியாசமான அதே நேரம் சுவாரசிய அனுபவமாக உள்ளது என்று கூறியுள்ளார். மனித தொடர்பு இல்லாமல் இருந்தது மாறுபட்ட அனுபவத்தை தந்ததாக கூறுகிறார்.குகையில் கம்பளி தொப்பிகளை உருவாக்குவதிலும், படங்களை வரைவதிலும், உடற்பயிற்சி செய்வதிலும், தனது நேரத்தை செலவிட்டார்.இந்த 500 நாட்களில் அவர் 60 புத்தகங்களை வாசித்துள்ளார் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீரை பருகியுள்ளார்.
ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் ஸ்பெலியாலஜிஸ்ட்கள் குழு, குகைகள் பற்றிய ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர்கள், வெளியில் இருந்து அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்களில் யாரும் அவளுடன் தொடர்பு கொள்ளவில்லை. ஒன்றரை வருடங்கள் அமைதியாக இருந்துள்ளார்.
குகைக்குள் சென்று சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் நேரத்தையும் நாட்களையும் எண்ணுவதை மறந்ததாகவும் நேரம் எப்படி செல்கிறது என்று தெரியாமல் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். குகையில் அவர் சந்தித்த கடினமான தருணங்களில் ஒன்று பூச்சிகள் படையெடுத்தது என்று அவர் நினைவு கூர்ந்தார்.
குகைக்குள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து மொய்த்த பூச்சிகளோடு வாழ்வது தான் சிரமமாக இருந்தது. ஆனால் அதையும் சகித்து வாழ பழகிவிட்டேன் என்று ஃப்ளாமினி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். வெளியில் வந்ததும் அவருக்கு உளவியல் மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சை அளித்துள்ளனர்.
ஃபிளாமினியின் ஆதரவுக் குழு கூறுகையில், அவர் ஒரு குகையில் அதிக நேரம் தங்கியதற்கான உலக சாதனையை முறியடித்துள்ளார்; இருப்பினும், ஒரு குகையில் தனியாக வாழ்ந்ததற்கான கின்னஸ் உலக சாதனைகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Solo Travel, Travel