நாம் ஊர்களில் குழந்தைக்கு பெயர் வைக்க ஆயிரம் பஞ்சாயத்துகள் வரும். என் அப்பா பெயர் வைப்பதா? உன் அம்மா பெயர் வைப்பதா? நியூமெராலஜி படி இருக்கிறதா? என்ன எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும், முடிய வேண்டும் என்று கிராஸ் வோர்ட் (cross word) புதிர்களை போல போட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் கட்சியின் பெயர்களையும், நீதிமன்ற பெயர்களையும் ,இனிப்பின் பெயர்களையும் வைத்துள்ள குழந்தைகளை பார்த்ததுண்டா?
தென்னிந்தியாவில் ஒரு கிராமம் உள்ளது. அங்கு தான் விசித்திரமான பெயர் சூட்டும் வழக்கம் எல்லாம் நடைமுறையில் உள்ளது.கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள பத்ராபூர் கிராமத்தில் தங்கள் குழந்தைகளுக்கு வினோதமான பெயர்களை வழங்கும் வழக்கம் உள்ளது. இதற்கு ஒரு சுவாரசிய கதையையும் இந்த மக்கள் கூறுகின்றனர்.
சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஹக்கி பிக்கி சமூக பழங்குடியின மக்கள் காடுகளில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் 1970 களில், வனத்துறையால் அமல்படுத்தப்பட்ட கடுமையான சட்டங்களுக்குப் பிறகு, அரசாங்கம் அவர்களை காட்டு பகுதியில் இருந்து வெளியேற்றி பெங்களூருக்கு அருகிலுள்ள பத்ராபூர் போன்ற நகர்ப்புறங்களுக்கு மாற்றி குடியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த பழங்குடியின மக்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் வித்தியாசமான பெயர்களை வைத்தால் என்ன என்று முயற்சி செய்துள்ளனர். அதன் படி ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹக்கி பிக்கி சமூகத்தால் ஒரு சிறப்பு பெயர் சூட்டு விழா தொடங்கப்பட்டது. அப்போதான் இந்த புதிய வழக்கம் அறிமுகம் ஆனது.
இந்த கிராம குழந்தைகளுக்கு இங்கிலீஷ், காபி, பஸ், அனில் கபூர், ஹை கோர்ட் (high court), எலிசபெத், ஜப்பான், மைசூர் பாக், சுப்ரீம் கோர்ட், ஒன் பை டூ, காங்கிரஸ், ஜனதா, அமெரிக்கா ஆகியவற்றை தங்கள் குழந்தைகளின் பெயர்களாக வைக்கிறார்கள். பழங்குடியினரிடம் ஏன் தங்கள் குழந்தைகளுக்கு இப்படி பெயர் வைக்கிறீர்கள் என்பதற்கு, சில பாலிவுட் பிரபலங்களை விரும்புவதாகவும், அதனால் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரை வைப்பதாகவும் தெரிவிக்கின்றனர் .
அதேபோல, ஒரு சிலருக்கு இனிப்பு பிடித்ததால், அந்த இனிப்பின் பெயரையே தங்கள் குழந்தைக்குப் பெயராக வைத்தார்கள். இங்குள்ள ஒவ்வொரு பெயருக்கும் ஒரு வரலாறு உண்டு. உதாரணமாக, சிக்கமகளூருவின் காபி தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு முகாமில் பிறந்த குழந்தைக்கு காபி என்று பெயர் வைத்துள்ளனர். அதே போல ஒரு குழந்தையின் பெயர் கூகுள், மற்றொரு குழந்தை ஒபாமா.
ஹம்பி பல்கலைக்கழகத்தின் பழங்குடியினர் ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இந்த பழங்குடி ராஜ்புத் மன்னர் ராணா பிரதாப்புடன் தொடர்புடையது. முன்னதாக, இந்த மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆறுகள் அல்லது மலைகளின் பெயரை வைத்தனர், ஆனால் அரசியல் எழுச்சிகள் மற்றும் ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு, இந்த மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவினர். அதன் பெயர்கள் அவர்களது குழந்தைகளின் பெயர்கள் பொருட்கள் , நிறுவனங்கள் அடிப்படையில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 14 பேச்சுவழக்குகளை பயன்படுத்துகின்றனர். ஹக்கி பிக்கி இனத்தவர்கள் பெயர்கள் மட்டுமல்லாது திருமணம் மற்றும் விவாகரத்து முறைகளில் கூட வித்தியாசமான நடைமுறைகளை தான் கையாள்கிறார்கள். உதாரணமாக, இங்கு வரதட்சணை மணமகளால் அல்ல, மணமகனால் வழங்கப்படுகிறது. அதே போல திருமண பந்தம் பிரிவின் போது, திருமணத்தின் போது ஆண் கொடுத்த வரதட்சணையில் பாதியை பெண் திருப்பித் தர வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.