முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த சுரங்கத்தில் நீங்கள் தோண்டி எடுக்கும் எல்லா வைரமும் உங்களுக்கே...!

இந்த சுரங்கத்தில் நீங்கள் தோண்டி எடுக்கும் எல்லா வைரமும் உங்களுக்கே...!

வைர சுரங்கம்

வைர சுரங்கம்

இந்த சுரங்கத்தில் வைரம் மட்டும் அல்ல செவ்வந்திக்கல் , கோமேதகம் போன்ற 40 விலைமதிப்பற்ற தாதுக்கள் காணப்படுகின்றன.

  • Last Updated :
  • Chennai |

வெறும் ஒரு வைரக்கல் பதித்த நகைகளின் விலையே எக்கச்சக்கமாக சொல்லும் காலத்தில் ஒரு வைர சுரங்கத்திற்கு குறைவான அனுமதி கட்டணம் செலுத்திவிட்டு போய் நீங்கள் தோண்டி எதை எடுத்தாலும் அது உங்களுக்கே சொந்தம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் உண்மையில் அப்படி ஒரு இடம் உள்ளது. எங்கே, எப்படி, போன்ற விபரங்களை உங்களுக்கு சொல்கிறோம்.

மத்திய அமெரிக்க நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆர்கன்சாஸில்(Arkansas) தென்மேற்கு பகுதியில் க்ரேட்டர் ஆஃப் டயமண்ட்ஸ் ஸ்டேட் பூங்கா(Crater of Diamonds State Park) என்ற இடம் உள்ளது. இது அனைத்து விதமான மக்களும் அனுமதிக்கப்படும் நாட்டின் ஒரே வைரச் சுரங்கமாகும். 1972 ஆம் ஆண்டில் 911 ஏக்கர் அரச பூங்காவின் ஒரு பகுதியாக உள்ள இந்த வைரச் சுரங்க பள்ளம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

அன்றிலிருந்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் விலைமதிப்பற்ற கற்களை தோண்டி எடுப்பதற்காகவே வருகை தருகின்றனர். விலைமதிப்பற்ற கற்கள் பெரிய எண்ணிக்கையில் இருக்காது. அதனால் தான் மக்களை தோண்ட அனுமதிக்கிறார்கள் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். 1972 இல் இருந்து இன்றைய காலம் வரை சுமார் 35,000 கற்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1906 ஆம் ஆண்டில் ஜான் ஹடில்ஸ்டோன் என்பவர் தனது பண்ணையின் மண்ணில் இரண்டு விசித்திரமான படிகங்களைக் கண்டறிந்தபோது இந்த இடத்தில் முதன்முதலில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. லாம்ப்ராய்ட் (lamproite) தாது நிரப்பப்பட்ட எரிமலைக் குழாயின் மேலே தனது பண்ணை இருப்பதை அவர் பின்னர் தான் உணர்ந்தார். அதன் பின்னர் பல கைகளுக்கு இந்த நிலம் மாறியது. அதோடு இந்த நிலத்தில் கிடைக்கும் விலைமதிப்பற்ற கற்களை பற்றி ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்தது.

1800களில் ஆப்பிரிக்காவில் வைரத் தேடல் வெறிகொண்டு நடந்ததை போல இங்கும் வைர வேட்டைகள் நடந்தன. ஆனால் 1919 இல் ஏற்பட்ட தீவிபத்திற்கு பின்னர் இந்த இடம் மூடப்பட்டது. 1950 இல் மீண்டும் திறக்கப்பட்ட இந்த இடம் 1972 இல் பொதுமக்களுக்கான இடமாக மாறியது. அதன் பின்னர் இங்கு தோண்டி எடுக்கும் பொருட்கள் யாவும் எடுப்பவருக்கு சொந்தமாக மாற ஆரம்பித்தது.

இந்த சுரங்கத்தில் வைரம் மட்டும் அல்ல அமெதிஸ்ட்(amethyst) - செவ்வந்திக்கல் , கோமேதகம் (garnet), கால்சைட் (calcite), பெரிடோட் (peridot) போன்ற சுமார் 40 வெவ்வேறு விலைமதிப்பற்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இவற்றையும் தோண்டி எடுத்த மக்களே எடுத்து செல்ல அனுமதியும் உண்டு.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில ரத்தினங்கள் பிரபலமடைந்துள்ளன என்பது இன்னும் சுவாரஸ்யமானது. அவற்றில் அமெரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பெரிய வைரங்களான 40.23-காரட் அங்கிள் சாம்(Uncle Sam ) (1924), மற்றும் 34.25 - காரட் ஸ்டார் ஆஃப் மர்ஃப்ரீஸ்போரோ (Star of Murfreesboro) (1964)அடங்கும் அது போக 15.33 காரட் ஸ்டார் ஆஃப் ஆர்கன்சாஸ் (Star of Arkansas)(1956), பிரபலமானது. மற்ற கற்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் மதிப்பில் அதிகமானதே.

நீங்களும் வைரம், கோமேதகம் போன்ற விலைமதிப்பற்ற கற்களை நீங்களே தோண்டி எடுக்க விரும்பினால் ஆர்கன்சாஸ் பூங்காவிற்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். கற்களை தோண்டி எடுக்க நீங்களே தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்லலாம். அல்லது அங்கே வாடகைக்கும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மோட்டார் மூலம் இயங்கும் பவர் டூல்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.

இதையும் பாருங்க: ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா!

top videos

    வெயில் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும்போது போவது சிறந்தது. அதுபோக அவ்வப்போது இந்த நிலத்தை உழுவார்கள். இதனால் அடியில் இருக்கும் கற்கள் தரைக்கு கொண்டுவரப்படும். இதை சல்லடை போட்டு சலித்து கிடைக்கும் கற்களை நீங்கள் எடுத்துச்செல்லலாம். அதற்கு யாரும் தடை விதிக்க மாட்டார்கள்.

    First published:

    Tags: Diamond, Travel