உலகம் ஓடும் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து போக்குவரத்து துறைகளும் வேகம் எடுக்க வேண்டி இருக்கிறது. நாள் கணக்கில் பயணித்த இடங்களை எல்லாம் இப்போது மணிக்கணக்கில் கடக்க வைக்கும் தொழில்நுட்பங்களும் உபகரணங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. புல்லட் ரயில் திட்டம் முதல் வந்தே பாரத் வரை எல்லாம் பயணத்தை வேகப்படுத்தவே கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வருகை குறித்த பேச்சு முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறைந்த விலையில் சீக்கிரம் போகலாம் என்ற பயன்பாட்டால் இதன் மீது மக்களின் ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானத்துறை சில இடங்களில் அடிவாங்கி வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் விமான டிக்கெட்களின் விலையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவும் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் அதிகப்படியான சலுகைகளை பெற முடிவதாக பயணிகள் கூறுகின்றனர். உதாரணமாக சென்னை டூ பெங்களூருவிற்கு விமான பயணத்தின் விலை பாதிக்கும் குறைவாக 900 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் செல்ல 4.25 மணி நேரம் ஆகிறது. இதில் ஏசி சேர் கார் கட்டணமாக 995 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் கார் கட்டணமாக 1,885 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கிட்டதட்ட விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. விமானம் போன்ற சேவைகள் இவளவு குறைந்த விலைக்கு கொடுக்கும் பொது யார் வேண்டாம் என்பார்கள். இதனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதான மோகம் பெரிதும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் சென்னை டூ பெங்களூரு தடத்தில் உள்ள விமானங்கலில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் இந்த விமானங்களை நோக்கி மீண்டும் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சலுகை விலையில் டிக்கெட்களை வழங்க முடிவு செய்துள்ளன. இந்த முடிவிற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
அதாவது விமான எரிபொருள் விலை சரிவு, ஆகாஷா ஏர் (Akasa Air) போன்ற குறைந்த டிக்கெட் விலை கொண்ட விமானங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, கார்ப்பரேட் தரப்பில் இருந்து மந்தமான விமான அணுகல், ஐடி துறையின் வீழ்ச்சி ஆகியவை சேர்ந்து இந்த அதிரடி முடிவுகளை எடுக்க காரணமாக அமைந்துள்ளன.
இதுதவிர சென்னை டூ பெங்களூரு பயணத்திற்கு சாலை அல்லது ரயில் பயணத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். பெங்களூரு விமான நிலையம் நகரின் மையப் பகுதியில் இல்லாமல் ஊருக்கு வெளியே உள்ளது. பெருகி வரும் ட்ராபிக்கில் விமான நிலையத்திற்கு செல்வதே பெரிய பயணமாக மாறிவிடுகிறது. இந்த காரணங்களும் விமான சேவைகளை குறைய வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வருகை விமான நிறுவனங்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே பயணிகளை கவர 1,000 ரூபாய் வரை தங்களது டிக்கெட் விலையை குறைக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால் அடுத்த சில வாரங்கள் பெரிய அளவில் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. மேலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக ஹைதராபாத் செல்லக் கூடிய விமானங்களும் இருக்கின்றன.
இதையும் பாருங்க : கோவாவில் நடக்கும் 'ஸ்பிரிட் ஆஃப் கோவா' - பாரம்பரிய மூன்று நாள் மது திருவிழா!
இவற்றில் பெங்களூரு வரை செல்லும் போது பல இருக்கைகள் காலியாக காணப்படுகின்றன. இதுபோன்ற சிக்கலை தவிர்க்க தற்போதைக்கு டிக்கெட் விலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விமான டிக்கெட் சலுகை என்பது சென்னை டூ பெங்களூரு வழித்தடத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற வழித்தடங்களில் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Chennai Airport, Flight travel, Vande Bharat