பதினான்கு வயதிலிருந்து பதினெட்டு வயதுக்குள் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பொறுத்திருக்கிறது. உங்களுடைய திருமணம் குறித்த முடிவுகள் என்று சத்குரு இந்த பதிவில் விளக்கம் அளிக்கிறார்.
திருமணம் என்றால் என்ன? அது அவசியமானதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், திருமணம் ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். ஒரு மனிதர் எனும்போது, அது ஒரு ஆணாக இருந்தாலும் அல்லது ஒரு பெண்ணாக இருந்தாலும், உங்களுக்குக் குறிப்பிட்ட தேவைகள் உள்ளன. உங்களுக்கு எட்டு வயதாக இருந்தபோது, திருமணம் குறித்து நான் உங்களிடம் கேட்டிருந்தால், அந்தக் கேள்வியில் உங்களுக்கு எந்த அர்த்தமும் இருந்திருக்காது. நீங்கள் பதினான்கு வயதாக இருந்தபோது நான் கேட்டிருந்தால், நீங்கள் சிறிது வெட்கப்பட்டிருக்கலாம் ஏனென்றால் அப்போது நீங்கள் அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். உங்களது உடல் ஒரு குறிப்பிட்ட வழியில் வளரத் தொடங்கி, ஹார்மோன்கள் உங்களது புத்திசாலித்தனத்தை பாதிக்கத் தொடங்கியிருந்தது. உங்களது 18 வயதில் நான் கேட்டிருந்தால், ஒரு தெளிவான, “வேண்டும்” அல்லது “வேண்டாம், இப்பொழுது இல்லை” அல்லது “எப்பொழுதும் இல்லை” என்று பதில் அளித்திருக்கலாம்.
Also see... டீன்-ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி..? சத்குரு தரும் விளக்கம்
இந்தப் பதிலானது, பதினான்கு வயதிலிருந்து பதினெட்டு வயதுக்குள் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பொறுத்திருக்கிறது. இன்றைக்கு உலகின் சில பகுதிகளில், “திருமணம்” என்ற வார்த்தை, மிகவும் எதிர்மறையான ஒரு கருத்தைப் பெற்றிருக்கலாம். ஏனெனில் இந்த விஷயத்தில் ‘இளம் பருவத்தினரின் சுதந்திரம்’ என்னும் ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. சில சமூகங்களில் இளைய சமுதாயத்தினர், திருமணத்தை ஒரு மோசமான விஷயமாகப் புரிந்து வைத்துள்ளனர்.
நீங்கள் இளமையில் இருக்கும்பொழுது, திருமணத்திற்கு எதிராக இருக்கின்றீர்கள், ஏனெனில் உங்களது பௌதீக உடல் ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிறது. அப்பொழுது திருமணம் என்பது ஒரு பிணைப்பாகவும், சங்கிலியாகவும் தோன்றுகிறது. நீங்கள் ஒரு விதமாக செயல்பட விரும்புகிறீர்கள். ஆனால் மெல்ல மெல்ல, உடல் பலவீனமடையும்பொழுது, முழு விருப்பத்துடன் இணக்கமான முறையில், உங்களுடன் யாராவது இருப்பதை நாடுகிறீர்கள்.
“நான் திடமாக இருக்கும்போது எனக்கு ஒருவரும் தேவையில்லை, நான் பலவீனமடையும்பொழுது, என்னுடன் யாரோ ஒருவர் இருப்பதை நான் விரும்புகிறேன்.” – இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான உணர்வு.
உங்கள் ஆரோக்கியத்தின் உச்சத்தில் நீங்கள் இருக்கும்பொழுது, ஒருஇணையான உறவு உருவாக்கப்படவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் பலவீனத்தில் இருக்கும்பொழுது, நம்பிக்கை தராத உறவுகளையே உருவாக்குவீர்கள். நீங்கள் நன்றாக இருக்கும்பொழுது, உங்கள் உயிர்த்தன்மையின் உச்சத்தில் இருக்கும் பொழுது, அப்போதுதான் நீங்கள் ஒரு உறவு நிலையை உருவாக்க வேண்டும். அது உறவு நிலையின் எல்லா ஏற்றத்தாழ்வுகளின் இடையிலும் உங்களை அழைத்துச் செல்லும்.
Also Read... கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் - சத்குரு வலியுறுத்தல்
ஒரு மனிதராக, உங்களுக்கு உடல் தேவைகள், உணர்ச்சித் தேவைகள், உளவியல் தேவைகள், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைப் பற்றி விழிப்புடன் சிந்தித்துப் பார்ப்பதற்கு மக்கள் விரும்பாமல் இருக்கலாம், ஏனெனில் இந்த விதமாகச் சிந்தித்தால், அவர்களது திருமணம் அருவருப்பானதாக ஆகிவிடும் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் இந்தத் தேவைகளும் அதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நிலைமைகளும் இருந்து கொண்டுதான் உள்ளது.
இன்றைய பெண்களைப் பொறுத்தவரையில், உலகம் ஓரளவுக்கு மாறியுள்ளது. முக்கியமாக, சமூகத்துக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை. அவள் தனக்கானதைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. பெண் தனக்குரிய பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களில் தானே முடிவெடுக்க முடிகிறது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு அப்படி இல்லை. இப்பொழுது ஒரு சிறிதளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்கான காரணங்களில் குறைந்தபட்சமாக இரண்டாவது காலாவதியாகிவிட்டன.
மற்ற மூன்று காரணங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உளவியல் ரீதியாக, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான ஒரு துணை தேவையா? உணர்ச்சி ரீதியான துணை உங்களுக்குத் தேவையா? மற்றும் உங்களது உடல் ரீதியான தேவைகள் எவ்வளவு வலிமையாக உள்ளது? ஒரு தனிமனிதராக நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். சமூக ரீதியாக அல்ல, ஒவ்வொருவரும் மணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது ஒருவரும் மணம் செய்துகொள்ளக்கூடாது என்று சமூகத்திற்கு பொதுவாக சொல்ல முடியாது. இது ஒரு பொதுவான சமூக நியதி அல்ல. அந்த முறையில் அது நன்மை தரப்போவதில்லை.
ஒரு தனிமனிதராக, உங்கள் தேவைகள் எவ்வளவு வலிமையானவை?
நீங்கள் எளிதில் கடந்து செல்லக்கூடிய வகையில், ஒரு விதமான குறுகியகால தேவையாக இருக்கிறதா? அது அப்படி இருந்தால், திருமணம் செய்து கொள்ளாதீர்கள், ஏனெனில் குறுகியகாலத் தேவைக்காக நீண்டகாலப் பந்தம் கொள்வது தேவையற்றது. அவ்வாறு நீங்கள் திருமணம் செய்தால், இரண்டு பேர் மட்டுமல்ல. ஒரு குடும்பமே விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
திருமணம் தவறு என்று நான் கூறவில்லை. உங்களுக்கு அது வேண்டுமா என்பதுதான் கேள்வி. சமூக நியதியினால் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதரும், ஆணாக இருப்பினும் அல்லது பெண்ணாக இருப்பினும் தனக்குத்தானே இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
Also see... கடினமான மனிதர்களை கையாள்வது எப்படி? சத்குரு விளக்கம்
திருமணம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் உங்களுக்கு அதற்கான தேவை இல்லாத நிலையில் நீங்கள் திருமணம் செய்தால், அப்போது அது ஒரு குற்றம். ஏனெனில் நீங்கள் உங்களுக்கும், குறைந்தபட்சம் மற்றொரு நபருக்கும் துன்பம் இழைப்பீர்கள்.
புத்தராகிய கௌதமரை யாரோ ஒருவர், ”எனக்கு ஒரு துணை இருக்க வேண்டுமா?” என்று கேட்டபொழுது, அவர் கூறினார்,” “ஒரு முட்டாளுடன் நடந்து செல்வதைவிட, தனியாக நடப்பது மேலானது.” நான் அந்த அளவுக்குக் கடுமையாக சொல்ல மாட்டேன், நான் கூறுவது. ஒரே மாதிரியான ஒரு முட்டாளை நீங்கள் கண்டுபிடித்தால், அப்போது ஏதோ நடத்திக் கொள்ள முடியும். ஆனால் அதுகூட உங்கள் தேவையின் அடிப்படையில்தான் நடக்க வேண்டுமே தவிர, சமூகம் என்ன கூறுகிறது என்பதற்காகவோ அல்லது மற்றவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்காகவோ அல்ல” என்றார்.
திருமணமா அல்லது திருமணத்திற்கு முன்னரே இணைந்து வாழ்வதா?
குறைந்தபட்சம், 25லிருந்து 30 சதவிகித மக்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது குறுகியகாலத் தேவையாக மட்டுமே இருக்கிறது. மற்றொரு 30லிருந்து 40 சதவிகிதத்தினருக்கு, அது சற்று கூடுதல்காலத் தேவையாக இருக்கலாம் என்பதால் அவர்கள் திருமண ஏற்பாட்டிற்குள் செல்கின்றனர். சுமார் 10லிருந்து 12 வருடங்களுக்கு அவர்கள் நல்ல விதமாக உணர்கின்றனர், அதற்குப்பிறகு, திருமணத்தை ஒரு சுமையாகக் கருதுகின்றனர். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே மிக வலிமையான தேவை இருக்கிறது. சுமார் 25 லிருந்து 30 சதவிகிதத்தினருக்கு, மிக நீண்ட காலத்திற்கு துணை தேவைப்படுகிறது. இவர்கள் நிச்சயமாக இத்தகைய ஏற்பாடுகளுக்குள் செல்லத் தேவைப்படுகிறது
Also see... ஏன் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்? - சத்குரு விளக்கம்
தற்பொழுது, மக்கள் வேறு விதமான தீர்வுகளைக் கண்டுள்ளனர். “பரவாயில்லை, நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், நான் இணைந்து வாழ்ந்து கொள்கிறேன்.” நீங்கள் ஒரு நபருடன் இணைந்து வாழும்போது, உங்களிடம் ஒரு சான்றிதழ் இருந்தாலும், இல்லாமற் போனாலும், அது எப்படியும் ஒரு திருமணம்தான். ஆனால் ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் இணைகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எண்ணினால், உங்களுக்கு நீங்களே ஆபத்தான பாதிப்பினை எற்படுத்திக் கொள்கிறீர்கள். ஏனெனில், உங்கள் மனதுக்கு ஞாபகப்பதிவுகள் இருப்பதைப்போல், உங்கள் உடல் அதைவிட மிக வலிமையான ஞாபகப் பதிவினைக் கொண்டுள்ளது.
உங்கள் மனதில் நீங்கள் சுமந்திருக்கும் ஞாபகப்பதிவை மிஞ்சுமளவுக்கு, உங்களது உடல் கிரகித்து, அனுபவங்களைத் தக்க வைத்திருக்கிறது. திருமணத்தின் முக்கியத்துவம் இந்தியப் பாரம்பரியத்தில், உடல் ரீதியான நெருக்கம் ருனானுபந்தம் என்று அழைக்கப்படுகிறது. உடலளவிலான நெருக்கத்தின் வாயிலாக உடலானது ஒரு ஆழமான ஞாபகப்பதிவை உருவாக்குகிறது. இந்தஞாபகத்தின் அடிப்படையில், உடல் பல விதங்களிலும் பதிலாற்றுவதுடன், எதிர்ச்செயலும் புரிகிறது. நீங்கள் பலப்பல ஞாபகங்களைப் பதிவு செய்தால், உடலில் குழப்பமும், ஒரு விதமான வேதனையும் இருக்கும்.
தங்கள் வாழ்வையும், உடலையும் கட்டவிழ்த்துவிட்ட மக்களிடம் இதை நீங்கள் தெளிவாகப் பார்க்க முடியும். உண்மையான ஆனந்தத்தின் எந்த உணர்வையும் அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. தயவுசெய்து கவனமுடன் உங்களைச் சுற்றிலும் இதை கவனித்துப் பாருங்கள். அவர்களால் ஒருபோதும் முழுமையாகச் சிரிக்கவும் முடியாது, முழுமையாக அழவும் முடியாது. ஒரு பிறவிக்காலத்தில் உடலின் குழப்பமான ஞாபகங்கள் உருவாக்கும் ஏராளமான பதிவுகளின் காரணமாக அவர்கள் இப்படி ஆகிறார்கள். இணைந்து வாழும் உறவு, உங்கள் தேவைகளைக் கையாள்வதற்கான தீர்வு அல்ல.
நீங்கள் திருமண பந்தத்திற்குள் செல்லுங்கள் அல்லது வெறுமனே இந்தத் தேவைகளைக் கடந்து செல்லுங்கள். ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் இது – உங்கள் தேவை எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை சமூகத்தின் தாக்கம் இல்லாமல், தெளிவாகப் பார்க்க வேண்டும் என்றால், முடிவெடுப்பதை சுமார் ஒரு மாத காலம், ஒத்தி வைப்பது எப்பொழுதும் சிறந்தது. நீங்கள் இந்த முடிவெடுக்கும் பொழுது, ஒரு தெளிவான நிலையில் இருக்க வேண்டும். தியானம் செய்வதன் மூலம், ஒரு விதத் தெளிவான நிலைக்கு உங்களைக் கொண்டு வாருங்கள். அந்தத் தெளிவான நிலையில், உண்மையிலேயே உங்கள் தேவைகள் எவ்வளவு வலிமையாக இருக்கின்றன என்று பாருங்கள்.
Also see... குழந்தைகள் சொல்பேச்சு கேட்க வேண்டுமா..? சத்குரு சொல்லும் ஆலோசனை
திருமணம் தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவ்வளவுதான், நீங்கள் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், அந்த முடிவை மீண்டும் திரும்பிப் பார்க்காதீர்கள். நீங்கள் ஒரு வழியில் செல்வதற்கு முடிவெடுத்தால், மற்றொரு வழியைப் பார்க்காதீர்கள். ஏதாவது ஒரு விஷயத்தையே நீங்கள் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் நீங்கள் ஊசலாடினால், குழப்பமான நிலையிலேயே எப்போதும் இருப்பீர்கள். “எது சாலச் சிறந்தது?” சிறந்தது என்பது இல்லை. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அதனை முழுமையாகச் செய்யும் விதமாக உங்கள் வாழ்வை வாழ்ந்திடுங்கள். இந்தத் தன்மை உங்களுக்கு இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும், அது சிறப்பானதுதான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Marriage Plan, Sadhguru