இன்பமும், துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. கணவன், மனைவி ஆயுள் முழுவதும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் வாழ்த்தினாலும் இடையிடையே சின்ன, சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.
புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்க்கையில் தேனிலவு காலம் முடியும் வரையிலும் பெரிய அளவுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்காது. ஆனால், நாட்கள் செல்ல, செல்ல கருத்து வேறுபாடுகள் மெல்ல முளைவிட தொடங்கும். எதை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும், எதை தீவிரத்தன்மை மிகுந்ததாகக் கருதி தீர்வு காண வேண்டும் என்ற தெளிவு தம்பதியர்கள் மத்தியில் இருக்க வேண்டும். அந்த வகையில் எதையெல்லாம் தீவிர பிரச்சனைகளாக கருதலாம் என்பது குறித்து மனநல நிபுணர், மருத்துவர் சாந்தினி துக்நாயத் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வாழ்க்கையில் சிக்கல் தரும் பிரச்சினைகள் பல ரூபத்தில் வரும். தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவது அல்லது அவமரியாதை செய்யப்படுவது, பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, சமரசம் செய்து கொள்ள விருப்பமின்றி இருப்பது ஆகியவை பிரச்சினைக்குரிய விஷயங்கள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் தொடக்கத்திலேயே அதற்குரிய தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
தகவல்தொடர்பின்மை : உங்களுடன் முகம் கொடுத்து பேசுவதற்கு உங்கள் பார்ட்னர் தயாராக இல்லை என்றால் அது ஆபத்தின் அறிகுறி ஆகும். உங்கள் திருமண வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றால் நல்லதொரு உரையாடல் அவசியமாகும். சரியோ, தவறோ அதை பேசி முடித்து, அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டும்.
அவமரியாதை : கருத்து வேறுபாடுகள் இருப்பினும், உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் குறையாமல் இருக்க வேண்டும். எப்போதாவது கோபத்தில் உங்களை அவமதிப்பது இயல்பானதுதான். ஆனால், எப்போதும் அது வழக்கமாக தொடருகிறது என்றால் அதுகுறித்து நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பொறாமை: உறவுகளுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருப்பது இயல்பு தான். ஆனால், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற நிலையில் பொறாமை மட்டும் அதிலிருந்து விதிவிலக்கா என்ன? விட்டுக் கொடுக்கும் மனம் இருந்தால் பொறாமை குணங்கள் தானாக மறைந்துவிடும்.
ஆர்வமின்மை : திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நகர்த்திச் செல்வது எப்படி என்ற ஆர்வம் இருவருக்கும் இருக்க வேண்டும். இரட்டை மாட்டு வண்டி போல இந்த ஆர்வம் சீரானதாக இருக்க வேண்டும். யாருக்கேனும் ஒருவருக்கு திருமண வாழ்க்கையில் ஆர்வம் குறைந்தாலும் அது பிரிவினையில் சென்று முடியும்.
இதையும் வாசிக்க: குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!
முரட்டுத்தனமான நடவடிக்கை: காரணமின்றி கோபம் கொள்வது, எப்போதுமே வன்மையான சொற்களைப் பயன்படுத்தி பேசுவது, கடந்தகால தவறுகளை மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பது என்பதெல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கையில் இடம்பெறக் கூடாத விஷயங்கள். இந்த பழக்கம் கணவன், மனைவி என இருவரில் யாருக்கு இருந்தாலும் அதை உடனடியாக கைவிட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love marriage, Marriage Life, Marriage Plan, Marriage Problems