சமீபமாக சிறுதானியங்கள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகினால், அவர்கள் நிறைய பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள சொல்கிறார்கள். ஆனால் அதில் பூச்சிக் கொல்லி உள்ளிட்ட ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுவதால், காய்கறிகளே பல நேரங்களில் எமனாகிவிடுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜிஷ்ணு ராகவன் என்ற 35 வயது மலையாள நடிகர் புற்றுநோயால் இறந்தார். எவ்வித தீய பழக்கமும் இல்லாத அவர், அதிகளவில் காய்கறிகளை சாப்பிட்டிருக்கிறார். அதில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்துகளால் புற்றுநோய் ஏற்பட்டு அதோடு 2 ஆண்டுகள் போராடி, இறுதியில் உயிர் நீத்ததாக அப்போது கூறப்பட்டது. இப்படியான விளைவுகளை தவிர்க்க தாங்களே தங்களுக்கான காய்கறிகளை விளைய வைப்பதில் சமீபமாக மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கிராமத்தில் தோட்டமோ அல்லது வீட்டை ஒட்டி சிறு இடமோ இருப்பவர்களுக்கு இது எளிதான விஷயம். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டோடு சேர்ந்த தோட்டம் அமைப்பது அரிதான ஒன்று. ஆகையால் பலரும் தங்கள் வீட்டு மாடியை தோட்டமாக மாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு பிரபல நாட்டுப்புற பாடகர்கள் அனிதா குப்புசாமி தம்பதியின் தோட்டம் சிறந்த வழிக்காட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் பார்ப்பதற்கு அது மாடித்தோட்டம் போலவே இல்லை. பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வது போலுள்ளது. அத்தனை அழகாய் பெரும்பாலான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைச் செடிகள் என மாடியை விவசாயக் காடாய் மாற்றியிருக்கிறார்கள்.
அண்ணாமலை கத்தரி, பச்சை குண்டு கத்தரி, பச்சை நீள கத்தரி, வரி கத்தரி என கத்தரியின் அனைத்து வகைகளும், அடுக்கு மல்லி, குண்டு மல்லி, மதுரை மல்லி, கனகாம்பரம், பாரிஜாதம், செண்பகப்பூ, நித்தியமல்லி, ரோஜாச்செடி என பலவகையான பூக்களும் அனிதா குப்புசாமியின் தோட்டத்தில் உள்ளன. பாவக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், எலுமிச்சை, மாதுளை என வீட்டுக்கு தேவையான அனைத்தையும் இயற்கையாக உற்பத்தி செய்துக் கொள்கிறார்கள்.
அனிதா குப்புசாமியின் மாடித்தோட்டம் 1,500 சதுர அடி கொண்டது. கொஞ்சம் கூட இடத்தை வீணடிக்காமல், தோட்டம் அமைத்திருக்கிறார்கள். ஒத்தையடி பாதை போல நடப்பதற்கு மட்டும் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் எல்லாம் செடி, கொடிகளால் நிரப்பியிருக்கிறார்கள்.
நீள சுரைக்காய், சொம்பு வடிவிலான சொம்பு சுரைக்காய் உள்ளிட்டவற்றை பயிரிட்ட குப்புசாமி, “நாலு சுரைக்காய் விதை இருந்தது, எங்க விதைக்க போடலாம்ன்னு இருந்தப்போ, செண்பகப்பூ தொட்டில விழுந்தது. சரி அதுக்கு இங்க தான் பிடிச்சிருக்கு போலன்னு, அந்த தொட்டிலயே முளைக்க போட்டேன். நாலுமே முளைச்சு இப்போ காய் காய்க்கிது” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பலவகையான கத்தரிக்காய், பப்பாளி, மக்காச்சோளம், வெத்தலை, சுண்டைக்காய், தட்டைப்பயறு, மாங்காய், முருங்கைக்காய், இலந்தைப்பழம், நாவல்பழம் உள்ளிட்ட பலவற்றையும் பயிரிட்டுள்ளார்கள். அனிதா குப்புசாமி தனது யூ-டியூப் சேனலில் மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களுக்கும் தொடர்ந்து பதிலளித்து வருவதோடு, புதிதாக தோட்டம் அமைக்க நினைப்பவர்களுக்கும் ஐடியாக்களை தருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home and Interior, Home tips, Terrace Garden