கோடைக்காலத்தில் வரும் பாதிப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகக் கல் பிரச்சனை. இது குணப்படுத்தக்கூடிய பாதிப்புதான் என்றாலும் அது தரும் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதேபோல் இது ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. கல் உருவாகி அது தீவிரமடைந்த பின்பே வலி மூலமாக அறிகுறியை வெளிப்படுத்துகிறது. எனவேதான் சிறுநீரகக் கல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிறுநீரகக் கல் என்றால் என்ன.?
சிறுநீரக கல் என்பது மினரல்கள் மற்றும் உப்பு ஆகிய இரண்டும் சிறுநீரகத்தில் தேங்கி திடமான கல்லாக மாறுகிறது. இதை மருத்துவ முறையில் ரெனால் கால்குலி, நெஃப்ரோலிதியாசிஸ் அல்லது யூரோலிதியாசிஸ் (renal calculi, nephrolithiasis or urolithiasis) என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக தண்ணீர் நன்கு குடிக்கவில்லை என்றால் வருவதாக எம்.வி மருத்துவமனையின் நீரிழிவு மருத்துவர் அருண் பிரசாத் கூறுகிறார்.
”அனைவருக்கும் சிறுநீரகத்தில் கல் உருவாகுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் அந்த கல்லின் அளவு 8mm-க்கு கீழ் இருக்கும் வரைதான். 8mm அல்லது 8mm-க்கு மேல் இருப்பின் அதுதான் கிட்னி ஸ்டோனாக கருதப்படுகிறது. 7mm-க்கு கீழ் இருக்கும் கல்லை நாம் தினசரி நன்கு தண்ணீர் குடித்து வந்தாலே சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். 8mm- ஆக இருக்கும்போதுதான் லேசர் சிகிச்சை அல்லது மாத்திரை மூலம் கரைப்பது போன்ற சிகிச்சைகள் தேவைப்படுகிறது” என்று கூறுகிறார் மருத்துவர்.
சிறுநீரகக் கல் உருவாக காரணம் :
இது பொதுவாக உணவு முறை, வாழ்க்கை முறை, உடல் பருமன், சில நாள்பட்ட மருத்துவ நிலை , சப்ளிமென்ட்ஸ் மற்றும் சிகிச்சை முறை போன்ற காரணங்களால் சிறுநீரகக் கல் உருவாகிறது. இது சிறுநீரகத்தில் துவங்கி சிறுநீர் பை வரை சிறுநீர் குழாயின் எந்த பகுதியையும் பாதிக்கலாம். அதுவும் எப்போது வேண்டுமென்றாலும் உங்கள் சிறுநீரானது செறிவூட்டப்படும்போது மினரல்களை படிகம் போல் மாற்றி அதை ஒரு திடமான பொருளாக உருவாக்குகிறது.
கோடைக்காலத்தில் சிறுநீரக் கல் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம்..?
”கோடைக்காலத்தில் இயல்பாகவே டிஹைட்ரேஷன் என்று சொல்லக்கூடிய நீரேற்றமின்மை பிரச்சனை அதிகமாக இருக்கும். இது தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால் வரும். கோடைக்காலத்தின் இந்நிலை இன்னும் மோசமாக இருக்கும். எனவேதான் சிறுநீரகக் கல் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக வர அவர்கள் தண்ணீர் குடிப்பதில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதே காரணம். எனவேதான் கோடைக்காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது மட்டுமன்றி சிறுநீரை கட்டுப்படுத்தாமல் உடனே வெளியேற்றிட வேண்டும். சிறுநீரை தேக்கி வைப்பதாலும் கல் உருவாகும் ” என்கிறார் மருத்துவர் அருண் பிரசாத்.
Also Read : சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் 10 அறிகுறிகள்.. உடனே சிகிச்சை பெறாவிடில் ஆபத்து..!
சிறுநீரகக் கல் பிரச்சனையின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?
சிறுநீரக கல் ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. அது சிறுநீரகத்திலிருந்து நகர்ந்து சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்ப்பை என சிறுநீரகத்தின் ஏதாவதொரு பகுதியில் தேங்கும்போதுதான் வலியை உணர்த்தும். அவ்வாறு சிறுநீரகக் கல் தேங்கும்போது..
- இடுப்பின் பின் பகுதி , இடுப்பின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் விவரிக்க முடியாத வலி இருக்கும்.
- வலி அப்படியே அடிவயிறு மற்றும் இடுப்புக்கு பரவும்
- அந்த வலியானது கொஞ்சம் கொஞ்சமாக வந்து தீவிரமாகி மீண்டும் படிப்படியாக குறையும். இப்படி வலி ஏற்ற இறக்கமாக இருக்கும்.
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு இருக்கும்.
இந்த அறிகுறிகளையும் சிலர் அனுபவிக்கக் கூடும் :
- சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும்.
- நுரையாக வரும் ஒருவித துர்நாற்றம் இருக்கும்.
- வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கலாம் அல்லது சிறுநீர் வருவதுபோல் தோன்றும். சிறுநீர் சொட்டு சொட்டாக வரும். அவ்வாறு வரும்போது தீவிர வலி, எரிச்சலை உணரலாம்.
- குமட்டல், வாந்தி வரலாம்.
- சிலருக்கு காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம். காரணம் சிறுநீரகக் கல்லுடன் தொற்றும் இருந்தால் அவ்வாறு வரும்.
அதேபோல் சிறுநீரகக் கல் கொஞ்சம் கொஞ்சமாக நகரும் போது வலி உண்டாகும் இடமும் மாறுபடும். ஆனால் வலியில் எந்த மாற்றமும் இருக்காது.
சிறுநீரகக் கல் பிரச்சனைக்கான சிகிச்சை என்ன..?
- சிறுநீரகக் கல்லின் அளவானது 8mm க்கு குறைவாக இருப்பின் தண்ணீர் அதிகமாக குடிக்க அறிவுறுத்துவார்கள்.
- 8mm க்கு மேல் இருந்தால் கல்லின் அளவு மற்றும் தேங்கியிருக்கும் இடத்தை பொறுத்து shock wave lithotripsy என்னும் சிகிச்சை மூலம் கல்லை உடைப்பார்கள் அல்லது dj stenting மூலம் கல்லை வெளியேற்ற முயற்சி செய்வார்கள்.
சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு சிறுநீரக மருத்துவரை (urologist) அணுகுவதே சிறந்தது. அவர் முதலில் உங்கள் பிரச்சனையை உணர்ந்து கல்லின் அளவையும் , எங்கு தேங்கியுள்ளது என்பதையும் கண்டறிய ஸ்கேன் செய்யக் கூடும். பின் அதை மாத்திரை மூலம் கரைக்கலாமா அல்லது லேசர் சிகிச்சை மூலம் அகற்றலாமா என்பதை முடிவு செய்து சிகிச்சை அளிக்கக்கூடும்.
ஒருமுறை கல்லை நீக்கிவிட்டால் மீண்டும் வராது என்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை. உங்கள் வாழ்க்கை முறை, தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை பொறுத்தே இதை கட்டுப்படுத்த முடியும்.
தவிர்ப்பதற்கான வழிகள் என்ன..?
- உடலை எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்துக்கொள்ள தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
- கால்சியம் , புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
- பழங்கள், காய்கறிகள் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney Disease, Kidney Stone