முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெரிகோஸ் வெயின் தொடக்க அறிகுறிகள் எப்படி இருக்கும்..? காரணங்களும்.. சிகிச்சை முறைகளும்..!

வெரிகோஸ் வெயின் தொடக்க அறிகுறிகள் எப்படி இருக்கும்..? காரணங்களும்.. சிகிச்சை முறைகளும்..!

வெரிகோஸ் வெயின்

வெரிகோஸ் வெயின்

பலவீனமான அல்லது பாதிப்பு கொண்ட இரத்த நாளங்களை கொண்டவர்களுக்கே அதிகமாக வெரிகோஸ் வெயின் பாதிப்பு உண்டாகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெரிகோஸ் வெயின் என்பது நரம்புகள் சுருட்டிக்கொண்டு சருமத்தின் மேற்பரப்பில் புடைத்து காணப்படும் பாதிப்பாகும். இது கால் நரம்புகளையே அதிகமாக பாதிக்கிறது. காரணம், நாம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ அல்லது நடந்தாலோ நரம்புகளின் அழுத்தம் காரணமாக உடலின் கீழ் பகுதியான காலில் இந்த பாதிப்பை உண்டாக்குகிறது.

வெரிகோஸ் வெயின் பாதிப்பில் பலரும் சிலந்தி நரம்பு சுருள் எனப்படும் spider veins பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது பார்ப்பதற்கு சிவந்த, பழுப்பு நிறம் அல்லது நீலம் நிறத்தில் மெல்லிய நரம்புகளாக சருமத்தின் மேல் தெரிய ஆரம்பிக்கும். இது 1 அல்லது 1.5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். தொடை, கணுக்கால், கால் போன்ற இடங்களில் சிலந்தி வலை போல் தெரிவதால் சிலந்தி நரம்பு என்று அழைக்கப்படுகிறது. இது அதிக பாதிப்பு இல்லாதது என்றாலும் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. இதை மருத்துவரின் அறிவுரைப்படி சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாலே சரி செய்துவிடலாம். பிரச்சனையை மேலும் பெரிதாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

தீவிர நரம்புச் சுருள் பிரச்சனையால் பாதிக்கப்படும் நபருக்கு வலி, அசௌகரியங்களை உணரலாம். சில நேரங்களில் இந்த தீவிர வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஆபத்தாகவும் மாறக்கூடும். இதை சரி செய்ய வேண்டுமெனில் சுய பாதுகாப்பு , சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.

வெரிகோஸ் வெயின் ஆரம்ப அறிகுறிகள் :

வெரிகோஸ் வெயின் ஆரம்பத்தில் உருவாகும்போது எந்த வித வலியையும் ஏற்படுத்தாது. இந்த நரம்புகள் சருமத்தின் மேல் அடர் நிறத்தில் ஊதா அல்லது நீல நிறத்தில் தோன்றும். பார்க்கும்போது நரம்புகள் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகளாக இருக்கும். குறிப்பாக இரத்தக் குழாய்களில் ஏற்படும் சிக்கலை குறிக்கிறது.

நரம்பு சுருள் பிரச்சனை ஏற்பட என்ன காரணம்..?

பலவீனமான அல்லது பாதிப்பு கொண்ட இரத்த நாளங்களை கொண்டவர்களுக்கே அதிகமாக வெரிகோஸ் வெயின் பாதிப்பு உண்டாகிறது. இதயத்திலிருந்து இரத்தத்தை கொண்டு செல்ல உதவும் தமனிகள் உடலின் மற்ற பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு திருப்பி அனுப்பும் பணியை நரம்புகள் செய்கின்றன. அவ்வாறு கால்களிலிருந்து இரத்தத்தை திருப்பி மேல் நோக்கியவாறு அதாவது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக திருப்பி அனுப்ப இந்த நரம்புகளே உதவி செய்கின்றன. இதற்கு  தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு பின் விரியும் தன்மை கொண்ட நரம்புகள் இரத்தத்தை மேல் நோக்கி அனுப்ப உதவுகிறது.

அதாவது, நரம்புகளானது,  இரத்த ஓட்டம் இதயத்தை நோக்கி செல்ல நரம்புகளில் உள்ள மெல்லிய வால்வுகள் விரிந்தும், அந்த இரத்தம் கீழ்நோக்கி வராமல் தடுக்க மீண்டும் மூடிக்கொள்ளும் பணியை செய்கிறது. அவ்வாறு இரத்தத்தை சீராக கொண்டு செல்ல உதவும் நரம்புகளின் வால்வுகள் பலவீனமடைந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ இரத்தம் மேல் நோக்கி செல்லாமல் கீழ்நோக்கி மீண்டும் வந்துவிடும். அவ்வாறு மேல்நோக்கிய செல்ல முடியாமல் தேக்கமாகும் இரத்தம் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி சுருள் சுருளாக வீங்க ஆரம்பிக்கும். இதுவே வெரிகோஸ் வெயின் பாதிப்புக்கு காரணமாகும்.

எப்போது தீவிர பாதிப்பாக கருதப்படுகிறது..?

1. கால்களில் வலி அல்லது கால்கள் பளுவான உணர்வை தரும்.

2. எரிச்சல், அடிக்கடி நரம்புகள் துடிக்கும் உணர்வு, தசைப் பிடிப்பு மற்றும் கணுக்கால் வீக்கம் , கால்களில் வீக்கம் இருக்கும்.

3. நீண்ட நேரம் அமர்ந்து எழுந்தாலோ அல்லது நின்று அமர்ந்தாலோ தாங்க முடியாத தீவிர வலி இருக்கும்.

4. சுருள் நரம்புகளை சுற்றி அரிப்பு இருக்கும்.

5. சுருள் நரம்புகளை சுற்றியுள்ள சருமத்தின் நிறம் மாறும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?

- நரம்பு சுருள்கள் அதிகரித்தால் அல்லது அதிக வலியை ஏற்படுத்தினால் மருத்துவரை அணுக வேண்டும்.

- சுய பாதுகாப்பு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் தரவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள்.

Also Read : நரம்பியல் நோய்களுக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.!

யாருக்கெல்லாம் பாதிப்பு அதிகம்..?

வயது : வயது முதிர்வு காரணமாக இரத்த ஓட்டத்தின் வேகம் குறையும்போது நரம்புச் சுருள் பாதிப்பு ஏற்படலாம்.

பாலினம் : பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் காரணமாக அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக கருத்தடை மாத்திரைகளும் பெண்களுக்கு வெரிகோஸ் வெயின் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகமாக ஏற்படலாம்.

குடும்ப வரலாறு : வெரிகோஸ் வெயின் பாதிப்பு வீட்டில் யாருக்கேனும் உள்ளது எனில் குடும்ப வரலாறு காரணமாக தொடரலாம்.

வேலை : உடல் பருமன், நீண்ட நேரம் அமர்ந்தே இருத்தல், நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்வோருக்கு இந்த பிரச்சனை வரலாம்.

இதை தடுக்க என்ன வழி..?

இரத்த ஓட்டத்தை சீராக்கி , தசைகளை சீர்படுத்தினால் வெரிகோஸ் வெயின் உருவாக்கத்தை தடுக்கலாம்.
அதிக ஹீல் கொண்ட காலணிகள், கால் பகுதிக்கு அசௌகரியமான அல்லது இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள்.
அடிக்கடி நீங்கள் நிற்கும் நிலை மற்றும் அமரும் நிலையை மாற்ற வேண்டும்.
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். உப்பு பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் குறைந்தது 1 மணி நேர உடற்பயிற்சி செய்யுங்கள்.
அமரும்போது அல்லது படுக்கும்போது கால்களை அவ்வப்போது உயர்த்துங்கள்.
உடல் எடையை அடிக்கடி கண்கானித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
First published:

Tags: Spider veins, Varicose veins, Varicose veins symptoms