முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு தூதுவளையும்.. கற்பூரவள்ளியும்.. சித்த மருத்துவரின் பரிந்துரைகள்..

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு தூதுவளையும்.. கற்பூரவள்ளியும்.. சித்த மருத்துவரின் பரிந்துரைகள்..

 இன்ஃப்ளூயன்சா ரக காய்ச்சல்

இன்ஃப்ளூயன்சா ரக காய்ச்சல்

எவ்வகையான நோயாக இருந்தாலும், நமது உடலின் நோய் எதிர்க்கும் கட்டமைப்பு உறுதியாக இருந்தால் எதிர்வரும் நோய்களைக் கண்டு அஞ்ச வேண்டியிருக்காது. உணவுகளின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் நமது உடலைப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் கட்டாயத்தில் இப்போது நாம் இருக்கிறோம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனாவிற்குப் பின்பு அடுத்த பரபரப்பு இப்போதைய இன்ஃப்ளூயன்சா காய்ச்சல்! ‘கொரோனா போன்ற கடுமையான காலக்கட்டத்திற்கு H3N2 ரகம் நம்மை அழைத்துச் செல்லுமா… கொரோனா போல பெரும் பாதிப்புகளைக் கொடுக்குமா…’ எனப் பலக் கேள்விகள் வெகு ஜன மக்களிடையே இப்போது பரவத் தொடங்கி இருக்கிறது.

கொரோனா காலத்திற்கு முன்பும் இது போன்ற இன்ஃப்ளூயன்சா ரக காய்ச்சல்கள் மனித சமூகத்தில் உலாவிக் கொண்டிருந்தாலும், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால், இப்போதைய காய்ச்சல் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

‘பெருந்தொற்று போன்ற சூழலுக்கெல்லாம் வாய்ப்பில்லை… இது எப்போதும் போல வரக் கூடிய இன்ஃப்ளூயன்சா வகை தான்… கொஞ்சம் மரபணு மாற்றம் அடைந்திருக்கிறது… மற்றபடி குழந்தைகளிடம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது…’ என்று ஆறுதல் அளிக்கின்றன அறிக்கைகள்.

கொரோனா காலத்தில் இருந்த லாக்-டவுன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இன்ஃப்ளூயன்சாவிற்கு குழந்தைகள் அவ்வளவாக ஆட்படவில்லை என்றும் சுட்டுகின்றன ஆய்வுகள்!

காய்ச்சல், இருமல், உடல் வலி, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்றவை இதில் காணப்படும் முக்கிய குறிகுணங்கள். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பின் மருத்துவமனை ஆதரவும் மிக மிக முக்கியம். பல நாட்களுக்கு நீடிக்கும் இருமல், இவ்வகை இன்ஃப்ளுயன்சாவின் முக்கிய குறிகுணம்.

சமீபத்தில் பிறந்த சிறார்களுக்கு H3N2 ரக இன்ஃப்ளுயன்சாவிற்கு எதிராக இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வாய்ப்பில்லை என்பதால், சில தற்காப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம். எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை சாப்பிட வைக்காமல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். வாய்ப்பிருக்கும் நேரத்தில் முகக்கவசம் அணியும் பழக்கத்தை மீண்டும் கடைப்பிடிக்கலாம். கைகளை அவ்வப்போது கழுவுவதும் பலன் அளிக்கும். குழந்தைகள் மட்டுமன்றி முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

எதிர்காலத்தில் கொரோனா போன்ற பெருந்தொற்றுகள், காய்ச்சல் வகையறாக்கள் போன்றவை அவ்வப்போது எட்டிப் பார்க்கலாம் என மருத்துவ உலகமும், சுற்றுச்சூழல் அறிக்கைகளும் சுட்டிக் காட்டுகின்றன. ‘இனி வாழப் பழகிக்கொள்ள வேண்டியது தான்…’ எனும் தாரக மந்திரம் கொரோனாவுக்கு மட்டுமல்ல, புதிது புதிதாக உருவெடுக்கும் நோய்களுக்கும் தான்!

எவ்வகையான நோயாக இருந்தாலும், நமது உடலின் நோய் எதிர்க்கும் கட்டமைப்பு உறுதியாக இருந்தால் எதிர்வரும் நோய்களைக் கண்டு அஞ்ச வேண்டியிருக்காது. உணவுகளின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் நமது உடலைப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் கட்டாயத்தில் இப்போது நாம் இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் மூலிகைகளை இப்போதைய காலக்கட்டத்தில் எப்படி பயன்படுத்தலாம்…

தூதுவளை: லேசான குறிகுணங்கள் இருப்பின் வாரத்தில் இரண்டு நாட்களாவது தூதுவளைக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ செய்து சாப்பிடலாம். வெப்பம் அதிகரித்திருக்கும் இப்போதைய காலத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் போதுமானது. தூதுவளைக்கு கோழையை அகற்றக் கூடிய தன்மை இருக்கிறது.

இதன் இலைகளை உலர வைத்து பொடி செய்து கொண்டு, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேங்காய், தக்காளி சட்னிகளுக்கு இடையில் அவ்வப்போது தூதுவளை இலைகளையும் சட்னியாக செய்து சாப்பிடலாம்.

இலைகளை நீரில் கொதிக்க வைத்து சிறிது மிளகு, உப்பு சேர்த்து, “சூப்” செய்தும் பருகலாம். பருப்பு ரசம், தக்காளி ரசத்திற்கு இணையாக தூதுவளை ரசத்தையும் பயன்படுத்தலாமே!

கற்பூரவள்ளி: இருமல் இருப்பின் சிறிதளவு கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடலாம். இதன் ‘வாலடைல்’ எண்ணெயில் உள்ள ’p-cymene’ மற்றும் ’thymol’ அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாகின்றன. இப்போதைய சூழலில் வேது பிடிப்பதும் பயன் கொடுக்கும். வேது பிடிக்க பயன்படும் மூலிகைகளில் கற்பூரவள்ளி முக்கியமானது. கற்பூரவள்ளியை இடித்து சாறு பிழிந்து, சம அளவு தேன் சேர்த்துப் பருகலாம். கற்பூரவள்ளி சாறை சுண்டச் செய்து பருகும் சுரச ரக மருந்தும் அற்புதப் பலன் அளிக்கும்.

சுக்கு: தலை பாரமாக இருப்பின், சுக்கைப் பால் விட்டரைத்து நெற்றியில் பற்று போடலாம். சுக்கு காபி, இஞ்சி டீ வகைகளை சூடாக பருக, தொண்டைக்கு இதம் கிடைக்கும். வெள்ளைச் சர்க்கரை சேர்த்த பானங்கள் வேண்டாம். இஞ்சி சட்னி செய்து தொடு உணவாகப் பயன்படுத்த செரிமானத்தை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும். இஞ்சியில் உள்ள Gingerol உடலின் நோய் எதிர்க்கும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இஞ்சியானது மரபணுக்களின் ஏரியாவில் நேரடியாக செயல் புரிந்து, நோய்களை தடுக்கிறது என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு!

கொள்ளு: ”நீரேற்றமோடு குளிர்சுரம் போம்” என்று கொள்ளின் பயன்களை விளக்குகிறது அகத்தியர் பாடல். உரமாக்கி செய்கையுடைய கொள்ளு கஞ்சியைக் குடித்தால், உடல் உரம் பெற்று நோய்களைத் தகர்த்தெறியும் வன்மை உண்டாகும். கொள்ளு ரசம், கொள்ளுத் துவையல் போன்றவை நோய்களை எதிர்க்கும் உணவு ஆயுதங்கள்.

துளசி: தினமும் ஒன்றிரண்டு துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் பற்றி கவலைபடத் தேவையிருக்காது. நீரில் கொஞ்சம் துளசி இலைகளைப் போட்டு பருகலாம். துளசியில் இருக்கும் ‘Eugenol’ எனும் வேதிப் பொருளே அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாகிறது.

மஞ்சள், மிளகு: பாலில் சிறிது மஞ்சள் தூளும் மிளகும் கலந்து கொதிக்க வைத்து குடிக்க தொண்டைக் கட்டும், சளியும் குறையும். நமது பாரம்பரியமான இந்த ‘தங்கப் பால்’ முறை, மேலை நாடுகளில் இப்போது பிரபலம். மூச்சு விட சிரமம் ஏற்படும் போது, வெற்றிலையில் இரண்டு மிளகு வைத்து மென்று சாப்பிட சுவாசம் சீராகும். மிளகு தூளைத் தேனில் கலந்து சாப்பிட இருமல், ஜுரத்தின் தீவிரம் குறையும். பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கும் மிளகு, அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய குட்டிப் பொக்கிஷம்!...

மஞ்சள் தூளினை உணவுக்குள் அடிக்கடி அனுமதிக்க வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட நம்முடைய மஞ்சள், DNAக்கள் பாதிப்படையாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cell membrane) பணிபுரிந்து, நோய் எதிர்க்கும் தன்மையை உயர்த்துகிறது.

‘கண்டங்கத்திரி காய் காரக் குழம்பு’, கப நோய்களைப் போக்கும் சிறப்பான உணவு. தொண்டை கரகரப்பிற்கு சிற்றரத்தையை வாயில் போட்டு மெல்லலாம். அதிமதுரப் பொடியினை வெந்நீரில் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும். சித்த மருந்துகளான அதிமதுர மாத்தி்ரை, தாளிசாதி வடகம், ஆகியவை இருமலின் தீவிரத்தை விரைவாக குறைக்கும். மருந்தாக எடுக்கும் போது, மருத்துவரின் ஆலோசனை முக்கியம்! நோய் மீது உங்கள் குடும்ப மருத்துவரின் பார்வை அவசியம்.

சர்க்கரை பயன்பாட்டினை அறவே தவிர்த்து,  பனங் கருப்பட்டிய அதிகமாக பயன்படுத்துவது சிறந்தது.

பழங்கள்: எலுமிச்சை, சாத்துக்குடி (’சிட்ரஸ்’ பழங்கள்) போன்றவற்றில் உள்ள Hesperidin, மற்றும் Quercetin நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களை திகட்ட திகட்ட சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கட்டமைப்பை உறுதிப்படுத்தும்.

பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் – சி நிறைந்த நெல்லிக்காய், நம் உடல் செல்களை பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாறு அவ்வப்போது அருந்தலாம். நோய் எதிர்ப்பு திறனை உருவாக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சித்த மருத்துவத்தில் உள்ள நெல்லிக்காய் லேகியம் நல்ல பலன் கொடுக்கும்.

நொறுக்குத் தீனிகளுக்கு டாடா…

மாலை நேரங்களில் நொறுக்குத் தீனிகளை தவிர்த்து, பல வகையான காய்கறி சூப் ரகங்களைத் தயாரித்து, அதில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் போட்டு அருந்தலாம். நோய் எதிர்ப்பு திறனை மிளகு மற்றும் ஏலக்காய் அதிகப்படுத்துவதாக தெரிவிக்கின்றன ஆய்வுகள். ‘Beta-carotene’ நிறைந்த கேரட்டைப் பச்சையாக சாப்பிடுவது நல்லது. காய்கறிகள் மற்றும் கீரைகளை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எந்த நோயிற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

Also Read : நெஞ்சு சளியை முறிக்கும் தூதுவளை ரசம்.. ரெசிபி இதோ..

சுக்கு, கொள்ளு, மிளகு, திப்பிலி, மஞ்சள், சிற்றரத்தை, அதிமதுரம், கண்டங்கத்திரி போன்ற நோய்களைப் போக்கும் பொருட்கள் நம் வீட்டு அலமாரிகளில் இடம்பெறுவது அவசியம். தூதுவளை, கருப்பூரவள்ளி, துளசி போன்ற மூலிகைகளை சிறிய தொட்டிகளில் வளர்த்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

ஆழ்ந்த உறக்கம்… ஆரோக்கியமான உணவு… நல்ல உடற்பயிற்சி…

இவை மூன்றும் போதும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க! ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Mental Stress) ஏற்படும் போது, ‘Cortisol’ ஹார்மோனின் அளவு அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலம் சற்று ஆட்டம் காணவே செய்யும். எனவே, கவலைகளை மறந்து மனதினை உற்சாகமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.

’நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் தாக்காது’ என மனதிற்குள் நேர்மறை எண்ணங்களை (Positive thinking) ஏற்படுத்தினாலே, பல நோய்கள் நம்மிடம் தலைக்காட்டாது என்கின்றனர் இன்றைய உளவியல் அறிஞர்கள். இதைத் தான் சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது.

உரிய பாதுகாப்பு முறை… சித்த மருத்துவ உணவியல், வாழ்வியல் முறைகள்… கூடவே மருத்துவரின் அறிவுரை… தேவையிருப்பின் ஒருங்கிணைந்த மருத்துவம்… இவை போதும், இந்தக் காலக்கட்டதை கடந்து செல்ல!...

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

(அரசு சித்த மருத்துவர்)

First published:

Tags: Avian influenza, Siddha Medicine, Virus